Sunday, February 3, 2008

சாகாக் கல்வியின் சூக்குமம்

உச்சி வாசல் திறந்து
நெற்றி வெளுக்கத்
தெற்றென விளங்கும்
உனதுண்மை

உனதுண்மையே மெய்யாக
நெற்றி வெளிச்சத்தை மொண்டு வந்து
அமுதாய்ப் பரிமாறும் மூச்சுக் காற்று

மூச்சுக் காற்று
மெய்யெங்கும்
அமுதை இறைக்க
அமரத்துவம் எய்தும்
மெய்

மெய்க்குள் மெய்யாய்
உனதுண்மை விளங்க
நெற்றி ஒளியில் கரைந்து
உச்சி வெளியில் மறையும்
மெய்

மெய் தான்
திரண்டு உருவமாக மண்ணில் தெரிந்த போதும்
மெய் தான்
கரைந்து அருவமாக விண்ணில் மறைந்த போதும்
மெய் தான்

மெய் தான் மெய்
உனதுண்மை உணர்ந்தால்
மரணம் பொய் தான்
உணர்க
உனதுண்மை

உனதுண்மையை
உச்சியில் வெட்டவெளியாய்
நெற்றியில் சுடரொளியாய்
நாசியில் உயிர் வளியாய்
நாவில் அமுத அளியாய்
மெய்யில் ஆனந்தக் களியாய்
கேட்டும்
கண்டும்
நுகர்ந்தும்
சுவைத்தும்
உற்றுணர்ந்தும்
அறிந்தாலொழிய
மரணமெனும் பொய்யின்
மாய வலைக்குள் சிக்குண்டு தவிப்பாய்
நீ

நீ
பரமாகாசப் பூரணப் பெருவெளி உச்சியில்
சிதாகாசச் சுயஞ் சுடரொளி நெற்றியில்
பரமாகாசப் பூரணப் பெருவெளியை
சிதாகாசச் சுயஞ் சுடரொளியின் மூலமே
காண முடியும் அறிய முடியும் உணர முடியும்
பரமாகாசப் பூரணப் பெருவெளியே
பூதாகாசமாய் விளங்குவதையும்
அப்பூதாகாசமே
நாசியில் உயிர் வளியாம் காற்றாக
விழிகளில் கண்ணொளியாம் நெருப்பாக
நாவில் அமுத அளியாம் நீராக
மெய்யில் ஆனந்தக் களியாம் நிலமாக
விளங்குவதையும்
சிதாகாசச் சுயஞ் சுடரொளியின் மூலமே
காண முடியும் அறிய முடியும் உணர முடியும்
பூதாகாசத்துக்கும்
பரமாகாசத்துக்கும் இடையே
பாலமாய்த் திகழும்
சிதாகாசத்தில்
பளிச்செனத் தெரியும்
உனதுண்மை

உனதுண்மை இதுவே
நீயே
பரமாகாசத்தில் அருவமாய் மறைந்தும்
பூதாகாசத்தில் உருவமாய்த் தெரிந்தும்
இருக்கிறாய்
மறைவதும் தெரிவதும்
தேர்ந்தறியும்
நீயே
சிதாகாசத்தில் அரு உருவாய்
இருக்கிறாய்
உச்சி வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது
நெற்றி வெளுத்து விளங்கியே இருக்கிறது
உன் கவனத்தை நெற்றிக்குத் திருப்பு
விழிகளை மூடி
நெற்றிச் சிதாகாசப் பிரகாசத்தில்
உச்சிப் பரமாகாசப் பெருவெளியைப் பார்
அப்பரமாகாசப் பெருவெளியே
பூதாகாசமாக விள்ங்குவதையும்
அப்பூதாகாசமே
நாசியில் உயிர் வளியாம் காற்றாக
விழிகளில் கண்ணொளியாம் நெருப்பாக
நாவில் அமுத அளியாம் நீராக
மெய்யில் ஆனந்தக் களியாம் நிலமாக
விளங்குவதையும்
பார்
முழு கவனத்துடன் பார்
நெற்றிச் சிதாகாசச் சுயம்பிரகாசத்தில்
தெற்றென விளாங்கும் உனதுண்மை
பரமாகாசமே உன் தலை
பூதாகாசமே உன் கால்
தலை கால் காட்டும் சிதாகாசமே உன் இருதயம்
தலையே இருதயத்தினூடே காலாகும்
கண்ணுக்குத் தெரியாத தலையையும் இருதயம் காட்டிக் கொடுக்கும்
கண்ணுக்குப் புலப்படும் காலையும் இருதயம் மறைத்து வைக்கும்
நீ தலை கால் தெரியாமல் திரிந்தால் மரணம்
நீ தலை கால் தெரிந்து இருந்தால் மரணமிலாப் பெரு வாழ்வு
சாகாக் கல்வியின் சூக்குமம் இதுவே

No comments: