Monday, February 18, 2008
சுழற்சி
மௌனத்துள் ஆழப் புதைந்து
ஜீவனுள்ள வார்த்தையாய்
எழுகிறேன்
எழுந்து
இறுகிய எண்ணச் சுவர்களைப்
பிளந்து
குறுகிக் கிடந்த உணர்வைப்
பரந்த என் அர்த்த ஆகாயத்தில்
படர விடுகிறேன்
படரும் உணர்வைப்
பதிக்கும் மொழியாய்ப்
பரவச முழக்கமிட்டு
வரிகளாய் விழுகிறேன்
விழுந்து எழுகிறேன்
விழிகளுக்குள் பாய்கிறேன்
செவிப்பறைகள் அதிர முழக்கமிட்டு
மூளையின் மத்தியில்
பெருந்தீயாய் மூள்கிறேன்
மூண்டெழும் என்னில்
பூக்கும் செஞ்சுடர்ப்பூ
காய்த்துப் பின்
கனிந்து விழ
ஜீவனற்ற உடம்பு
மெய்யாய் உயிர்த்தெழ
மீண்டும்
மௌனத்துள் ஆழப் புதைகிறேன்
விளக்கம்:
இருப்பாகிய மௌனத்தில் ஆழ ஊன்றி, பேரெண்ணமாய்ப் பேருணர்வாய்ப் பரிணமித்துப் பின் ஜீவனுள்ள வார்த்தையாக(தகவல் தொடர்பு அல்லது வெளிப்படு நிலை) எழுகிறேன். அடுத்து என் ஆக்க அல்லது செயல்படு நிலை. மௌனத்தில் நிலை கொண்டுள்ள பேரெண்ணத்திலும் பேருணர்விலும் ஊன்றியிருக்கும் ஜீவனுள்ள வார்த்தையின் அசாத்திய ஆற்றலால், குறுகிய எண்ணங்களும், உணர்வுகளும் விசாலப்படுத்தப் படுகின்றன. இன்னும் சூக்கும நிலையிலேயே இருக்கும் ஜீவனுள்ள வார்த்தை ஒலி வரி வடிவங்களில் தூல நிலை பெறுகிறது. வரி வடிவத்தில் காகிதத்தில் விழுகிறது. தூல நிலை பெற்ற ஜீவனுள்ள வார்த்தையை நீ படிக்கும் போது, அதன் வரி வடிவம் காகிதத்திலிருந்து எழுந்து, உன் விழிகளில் பாய, அதன் ஒலி வடிவத்தை நீ கேட்க, அதன் பேருணர்வுப் பேரெண்ண நிலை உன் அறிவில் ஞானத் தீயாய் மூள்கிறது. மூளும் ஞானத் தீயால், ஊன உடம்பு மெய்ஞ்ஞானப் பேருடம்பாய்ப் பரிணமிக்க, இவ்வரிய ஆக்க நிலையில் நீ இருப்பாகிய மௌனத்தில் ஒன்றுகிறாய். மந்திர தீட்சையின் சூக்குமம் இது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment