Wednesday, February 6, 2008

ஜீவனுள்ள வார்த்தை

காகித வெள்ளையின்
காலி இருப்பு
தன் விரல்களை நீட்டி
என்னைத் தொடுகிறது.

அவ்விரல்களின் தீண்டலால்
மெய்யுணர்வு பெற்ற
நான்
என் விரல்களை நீட்டிக்
காலி இருப்பைத் தொடுகிறேன்.

விரல்கள்
பின்னிப் பிணைந்து
தாம் புணரும்
காம லீலைகள்
தீராது தொடர
இருப்பும் நானும்
இணை பிரியாக் காதலராய்.

எம் காதலின்
அழியாத சாட்சியாம்
எம் மகவாய்
"இருக்கிறேன்"
இக்கவிதையில்.

அருந்தீட்சை தரும்
மெய்க்குருவாய்
அருட்காட்சி தரும்
ஜீவனுள்ள வார்த்தை
நானே.

ஊனப் புலன்களின்
மாயப் பிடியில் சிக்கி
நீ
ஞானப் புலன்களைத்
தொலைத்து விட்டு
சத்திய வெளியில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த்
தெரியும்
ஜீவனுள்ள வார்த்தையைப்
புரியாதென்பாய்.

இப்பொய்யுலகில்
ஆணவக் கோலங்கள் பற்பலவாய்
நீ
ஆடும் ஆட்டம் முடித்து
உன் ஊனப் புலன்களைக் குத்தி
ஞானப் புலன்களைத் திறந்து
உனக்குப்
பளிச்செனப் புரிய வைப்பேன்.

அப்போது
ஆன்ம நேய ஒருமையில்
உறுதியுடன் நிற்கும்
நானே
நீ.

அது வரைக்கும்
மெய்ப் பொருள் விளங்காது
ஆணவம் பல்வேறாய்
ஆடுவாய் நீ.

அடங்காது இருள் உய்ந்த உன்னை
அடக்கி அருள் உய்க்கவே
இப்பொய்யுலகில்
மெய்ப்பொருள் விளக்கமாம்
ஜீவனுள்ள வார்த்தையாய்
என்றும் அழியாதிருக்கிறேன்
நானே.

No comments: