Wednesday, July 9, 2008

விரல்

ஐம்புலன்களின்
கையடக்கப் பதிப்பு

பகுத்தறிவின் கையில்
இது ஒரு தீப்பந்தம்

இந்த வாமனன் தான்
"மெய்" என்ற
விசுவரூபமெடுத்து
விண்ணையும்
மண்ணையும்
அளக்கிறான்

ஞானம் என்ற
ஆலமரத்தின்
ஆணி வேர்

தொடுவதில் தொடங்கிய
இதன் சின்ன தேடல்
சந்திரனின் புழுதியைச்
சந்தனமாகப் பூசிக் கொண்டு
ஆன்மாவின் அடிமுடி தேடி
இன்னும் தொடர்கிறது

எந்த ஒரு கருத்தையும்
அது
எங்கிருந்து பிறந்தது என்று
ஆய்வு நடத்தி
அதன் ஆணி வேர் வரை
சென்றால்
அங்கு
விரல் தான் கிட்டும்

அடிப்படை உணர்ச்சிக் கூறுகளிலிருந்து
பூரண மெய்ஞ்ஞானம் வரை
கல்லிலிருந்து
கடவுள் வரை
மரத்திலிருந்து
மனிதன் வரை
பரிணாமம் என்பதே
விரலின் வெவ்வேறு
பரிமாணந் தான்

விரல் தான்
விரல் தான்
எல்லாமே விரல் தான்
அது
இல்லாமல் போனால்
விழல் தான்
விழல் தான்
எல்லாமே விழல் தான்

விழியும் விரல் தான்
பார்வை அதன் தொடல் தான்

செவியும் விரல் தான்
கேள்வி அதன் தொடல் தான்

நாசியும் விரல் தான்
மணமும் மூச்சும் அதன் தொடல் தான்

நாவும் விரல் தான்
சுவையும் பேச்சும் அதன் தொடல் தான்

மனமும் விரல் தான்
எண்ணமும் அறிவும் அதன் தொடல் தான்

இருதயமும் விரல் தான்
உணர்வும் அன்பும் அதன் தொடல் தான்

மெய்யும் விரல் தான்
உயிர் அதன் தொடல் தான்

தொடல் தான் தொடல் தான்
எல்லாமதன் தொடல் தான்
விரல்
இல்லாமல் போனால்
கெடல் தான் கெடல் தான்
உணர்வின்றிக் கெடல் தான்

No comments: