சூரியச் சிற்பி
கிரண உளியால்
கடலைச் செதுக்கி
மேகச் சிலைகள்
செய்யும் போது
சிதறும்
வெள்ளைச் சில்லுகள்
கடல் சிப்பியில்
சூரியத் தூசு
விழும் போது
உருவாகும்
வெண் முத்துகள்
சூரிய நெசவாளி
கடலைத்
தன் கிரணத் தறியிலிட்டு
வானத்துக்கும்
பூமிக்கும்
வெண் துகிலை
நெய்து தருகிறான்
கடலின்
திரவ உடம்பில் ஓடும்
திட வெள்ளை இரத்தம்
சூரியக் கவிஞன்
தன் கிரணப் பேனாக்களில்
கடலை
மையாக நிரப்பிக் கொண்டு
விண்ணிலும்
மண்ணிலும்
இரு வித வெள்ளைக் கவிதைகள்
எழுதுகிறான்
இவ்வெள்ளைக் கவிதைகள்
இல்லையென்றால்
மனித நாவுகள்
மரத்தே போய் விடும்
சூரிய ஒளி மதுவைக்
குடித்த கடல்
போதையில்
வானத்திலும்
பூமியிலும்
வெள்ளை எச்சிலைத் துப்புகிறது
ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும்
கடலின் நாவுகளைச்
சூரிய வாளால் அறுத்து
மனிதன்
தன் நாவுக்கு
ஒரு சுவை தருகிறான்
இந்தியனின் அடிமைச் சங்கிலியை
உடைக்கும் உளிகள்
இதிலிருந்து தான்
செய்யப்பட்டன
வெள்ளையனின் ஆதிக்கத்துக்குச்
சவாலாக
இந்தியன்
இந்த வெள்ளையனைச் செய்தான்
வெள்ளையராட்சியின் கல்லறை
இந்தியனால்
இந்த வெள்ளைக் கற்களாலேயே
கட்டப்ப்டடது
கடல் கூட்டிலிருந்து
இந்தியன் விடுவித்த
இந்த வெள்ளைப் புறாக்கள்
வெள்ளையனோடு
சமாதானம் பேச அல்ல
அவனைக் கொத்தப் புறப்பட்டன
கடலிலிருந்து
இந்த வெள்ளைக் கொடியைச் செய்த
இந்திய சுதந்திரப் போராட்டம்
வெள்ளையைப்
புரட்சியின் சின்னமாக்கும்
அதிசயம் செய்தது
இந்திய தேசியக் கொடி
இந்த வெள்ளைத் துணியிலிருந்து தான்
செய்யப்பட்டது
இந்த வெள்ளைப் பலகையில்
தியாகிகளின் குருதித் துளிகளால்
இந்திய சுதந்திரக் கவிதை எழுதப்பட்டது
No comments:
Post a Comment