Tuesday, July 29, 2008

நியதி

பொய்க் கனவுகள் யாவுங் கலைந்து
நள்ளிரவின் அதீத விழிப்பில்
மெய்யுணர்வாய் விடிகிறேன்


மாயைக் கருநிழல் கரைந்து போக
அருளொளிக் கிரணங்கள்
என் நிஜத்தைப் பளிச்செனக் காட்ட
என்றென்றும் ஜீவித்திருக்கும்
பெருவாழ்வை வெல்கிறேன்


இருமையின் மருண்ட கரிய இலைகள் உதிர்ந்து
ஒருமையின் அருள் மின்னும் பசிய இலைகள் துளிர்த்து
மாறாத ஞான வசந்தத்தில்
சுகமாய் நிற்கிறேன்


மௌனமாய்
மோகன ராகம் பாடி
இகத்தில் பர பம்பரமாய்ச்
சுற்றுகிறேன்


பக்கவாட்டில் கரங்களை விரித்து
இகத்தைத் தழுவி
செங்குத்தாய்ப் பரத்தில் ஓங்கி
சிலுவையாம் என் மெய்யில்
உயிர்த்தெழுகிறேன்


இருதய நியதியில்
மனமடங்கி
காலனின் விதி வென்று
மாயையின் சதி கொன்று
அன்பின் திடமாய்
என்றென்றும் வாழ்கிறேன்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "விதி" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: