Monday, July 21, 2008

சாத்திரங்களும் சூத்திரங்களும்

1


பாழாய்ப் போன காற்றே உன் குருவென்றுப்
பாழில் மனதை அலைய விடாமல் அது பற்றி
நெற்றி நடு வீதியில் நாட்டமுடன்
பாராயோ அல்லாவின் அருள்வெள்ளம்!
பார்க்கக் கேட்பாயே நபிகளின் அருண்மொழியை!
கண்டத்துள் வீழும் தெள்ளமுதப் பாகில்
இக வாழ்வின் ஒரத்தில் கிடக்கும் கல்லான உன் தேகம் உயிர்க்கும்
பர வாழ்வின் நடுவில் பராபர மெய்யோடது கலக்கும்!



2


மரண ஒரத்தில் கிடக்கும்
ஜடக் கல்லாய்
நீ

அமுதக் காற்று
உன்னை உயிர்ப்பித்துப்
பெருவாழ்வின் நடுவில்
வைத்தாலும்
மீண்டும்
முரண்டு பண்ணி
மரண ஒரத்தில்
ஜடக் கல்லாய்க் கிடப்பாய்
நீ

பாழாய்ப் போன
உன் மனதால்
பாழாய்ப் போகுதே
அமுதக் காற்று!

பரமபிதாவை
உன்னிடம் சேர்க்கும்
பரிசுத்த ஆவியாம்
வாசியை
வாசியாமல்
மரண ஓரத்தில்
ஜடக் கல்லாய்
பாழாகிறாயே
நீ



3


கல்லென்ற பூஜ்ஜியம்
பரிணாமப் படியேறி
மனிதமென்ற ஆறாகி
உலக வீதியில்
நடு நாயகமாய்ப்
பாய்ந்தோடும்

தன் நடு நிலை மறந்த
மனிதம்
பாய்ச்சலை விட்டுக்
கல்லாய் இறுகிப்
பாழாகும்

பாழானதற்கு வருந்தி
மனந் திருந்தி இளகி
ஆறாக மீண்டும் பாயும்

ஆறின் உச்சத்தில்
உச்சிப் பீடத்தில்
ஆன்ம நேயத்தில்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையாய்
எழும் ''யே
எழுமையாம் பரமபதம்

பரமபதமே
உச்சி பிளந்து
உள்ளே புகுந்து
மெய்யுடம்பாலயத்தில்
எழுந்தருளியிருக்கும்
பரமனின் உண்மை
காட்டும்.
மனிதம்
அமர தேவமாகும்.
மண்
சொர்க்கமாகும்.

பூஜ்ஜியக் கல்
பரிபூரணமாகும்
பரிணாமப் பாய்ச்சலை
பரமனின் பாதையை
யாவர் தடுக்க வல்லரோ!?



4


ஓர நாடிகள் இரண்டு
இடத்தில் இடகலை
வலத்தில் பிங்கலை

நடு நாடி ஒன்று
முதுகுத் தண்டாம் வீதி
நடுவிலேறும் சுழிமுனை

ஆடிக் காற்றாம் வாசி
ஓரங்களில் புழங்கும்
கல்லென்ற திடமான
பிராண சக்தியை
வீதி நடுவிலேற்றி
நெற்றி திறந்து
உச்சி பிளக்கும்

உயிர்ப்பாய் உன்னில்
உலவும்
ஆடிக் காற்றாம்
வாசியுள்ள போதே
தூற்றிக் கொள்

வாசியுள்ள போது
அதை வாசியாமல்
மனத்தைப் பாழாக்கும்
பொய்ச் சாத்திரங்களிலும்
வீண் சூத்திரங்களிலும்
மேய விட்டு
நீ
பிராண சக்தியைக் கழித்தால்
கல்லென்ற அத்திடமும்
காலியாகி
மெய்யென்ற உன்னுடம்பும்
பொய்யாகும்

வாசி
மௌன மெய்க்குருவின்
நற்சீடனாகி
நீ
அவர் வழி நடத்தும்
மெய்வழிச் சாலையாம்
வீதி நடுவில்
கவனத்தோடே செல்

சிவாவெனும்
வாசியவர் சொல்லும்
மெய்ஞ்ஞான சூத்திரம்
நீ
கேட்க
வேறெந்த சாத்திரமும்
முணுமுணுக்கும் மந்திரமும்
வேண்டாமே உனக்கு!



5


மூச்சை வெளிவிடும் போது
"லா இலாஹா இல்லல்லாஹ்"
என்று மனதில் உச்சரித்து
ஒரே கடவுளின் உண்மையைப்
பிரகடனம் செய்து
அல்லாவாம் பேரருட்ஜோதியன் தாள்களில்
உம் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
முழு மனதுடன் இருதய பூர்வமாக
அர்ப்பணித்து
மூச்சை உள்ளிழுக்கும் போது
"மொஹம்மத்துர் ரசூலல்லா"
என்று மனதில் உச்சரித்து
அருட்தந்தை அல்லாவின் தலைமகனாம்
நமக்கெல்லாம் உட்போதகராம்
நபிகளைத் துதி செய்து
அவரோடு வேறற ஒன்றி
இறை தூதுவனாய்
உம் உண்மையை உணர்ந்து
சூஃபி ஞானியர்
எப்போதும் செய்யும்
வாசி யோகப் பயிற்சியை
உம் அருங்கவிக்குப் பரிசாக
எளியன் நான்
உமக்குத் தந்தேன்.

ஹாவென்று வெளிமூச்சில்
சூ(ஸா)வென்று உள்மூச்சில்
உமக்குள் ஓடும் ஹடீத்(Hadith)தென்னும்
அஜபா காயத்ரீயை
உம் பெயரில் தாங்கிய
ஹ-ஸ-நீ(நீ என்பது இந்த ஈரண்டு பீஜங்களும் சேர்ந்தவன் தான் நீ என்பதை வலியுறுத்த)
நீவிர்
வாசி பேசாமல் பேசும்
இம்மந்திரங்களைக் கவனித்து
மனிதில் உணர்ந்து
யோகத்தில் இருப்பீர்!



6


ஒற்றைக் கல்லாய்
ஒளிக்கற்றைகள் உமிழும்
அரும்படிகம் தானோ
மண்டையின் மத்தியில்
சுழிமுனை!

மனத்தின் கவனம்
வீணே கசிய
பாழாய்ப் போகும்
வாசிக் காற்று
காட்ட வேண்டிய
ஒற்றைக் கல்லைக்
காண முடியாமல்
நீ!

நடு நாயகமாய்
மூளை மெக்காவின் மத்தியில்
காபாவாக
ஒற்றைக் கல் ஒளிர
நீ
செய்யும் உதாசீனத்தால்
ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கும்
வெற்றுக் கல்லாய்
அது வீணாகுதே!

மூச்சை வெளிவிட்டு
அல்லாவுள் இறந்து
மூச்சை உள்ளிழுத்து
நபிகளுள் பிறந்து
அல்லாவின் அருளாம்
புனித 'ரு'வை உணர்ந்து
இருந்தால்
காபாவின் உண்மை
உனக்கு விளங்கும்!

காற்றுள்ள போதே
நீ
கவனமாய்த்
தூற்றிக் கொண்டால்
மரண ஒரம் விட்டு
இடம் பெயர்ந்து
பெரு வாழ்வாம்
நித்திய ஜீவனென்னும்
வீதியின் மத்தியில்
நீ
உயிர்த்தெழலாம்!

இதற்கெல்லாம்
எனக்கு நேரமில்லை
என்று அலட்சியமாய்
நீ இருந்தால்
உனக்கு உள்ளிருக்கும்
காபாவை
எப்படி நீ தரிசிப்பாய்!
அவ்வொற்றைக்கல்
உமிழும் ஒளிக்கற்றைகளால்
உடம்பை மெய்யாக்கி
உயிர்களை
எப்படி நீ நேசிப்பாய்!
பெருந்தயாளன் அல்லாவை
வேறெப்படி நீ பூசிப்பாய்!
நபிகள் உன்னுள்ளே ஓதும்
புனித குர்-ஆன்
எப்படி நீ வாசிப்பாய்!



7


ஓரத்தில் முடக்கம்.
நடுவில் கவனமோ?
ஒளிருமே ஒற்றைக்கல்!

கவனமின்றிப் பாழாகுங் காற்று.
கவனமாய்ப் பாராயோ வாசி?
கல்லுடம்பு மெய்யாகும் மெய்!

தலை மெக்கா(வீதி).
நடுவிலோ காபா(ஒற்றைக் கல்)?
வழியுதே ஒளிக்கற்றை!

வெளியே பொய்க்குருமார் ஆரவாரம்.
உள்ளேயோ மெய்க்குருநாதர் மௌனம்?
கேட்குதே மறைமந்திர சூத்திரம்!

அருட்ஜோதியன் அல்லாவுள் இறப்பு.
ஞானமணியன் நபிகளுள்ளோ பிறப்பு?
வாய்த்ததே பெருவாழ்வின் சிறப்பு!

ஹ(வெளி மூச்சில் இறப்பு).
ஸ(உள் மூச்சிலோ பிறப்பு)?
நீ(அதிசயந்தான் நீ)!

இட வல ஓரத்தில் கிடந்த முடக்கம்
சுழிமுனை நடுவில் எழுந்ததோ நாகத்தின் படம்?
உயிர்த்தெழுப்புதே மெய்யமுதத் தீண்டல்!

இடகலை பிங்கலை ஓரங்கள்.
நடுவிலோ சுழிமுனை?
இக வீதியில் நீளுதே மெய்வழிச் சாலை!

ஓரங்களில் கவனமிலா உறக்கம்.
நடுவில் விழித்ததோ சுழிமுனை?
நனவானதே கனவுச் சொர்க்கம்!



8



Quote:






Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


ஓரமாய் கிடந்த
ஒற்றைக் கல்லொன்று
ஆடிக் காற்றில் அசைந்தாடி
வீதி நடுவில் வந்தது


கல்லின் பாடம்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
வாசி உன்னுள் ஓடும் போதே அதைக் கவனமாய் வாசித்து, மெய்ஞ்ஞானம் பெறு.

ஆடிக் காற்று அடித்த போது
அதை அலுத்துக் கொள்ளாமல்
அதை வையாமல்
அதை முழுவதுமாய்ப் பயன்படுத்தி
அதில் ஆனந்தமாய் அசைந்தாடி
ஓரத்திலிருந்து
நடு வீதிக்கு
வந்தது
நமக்கு உயிரற்றதாகத் தோன்றும்
கல்.
அஃறிணையாய் இருந்தும்
சலியாமல்
காற்றுள்ள போதே
தூற்றிக் கொண்டது
கல்.





Quote:







Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


பாழாய் போன காற்றென்று
அதை ஓரமிட்டுச் சென்றனர்
அவ் வழி சென்ற
ஒரு குருவும் அவர் சீடனும்


கல்லின் பாடத்தைப் புரிந்து கொள்ளாமல்
காற்றை நொந்து வைது
அஃறிணைக் கல்லின்
காற்றுள்ள போது
தூற்றிக் கொண்ட
அசகாய முயற்சியை
மொத்தமாய்க் கழிக்கும்
குரு சீடப் பொய் வேடங்களில்
உயர்திணையாம் மனிதம்.
குரு சீடப் பொய் வேடங்களால்
பாழாய்ப் போனது
கற் குருவின் பாடந்தான்.





Quote:







Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


மீண்டுமடித்த காற்றில்
மீண்டும் நடு வீதி சேர்ந்தது அக்கல்


மீண்டும் நடக்குது கல்லின் பாடம்
தான் அஃறிணையாயிருந்தாலும்
காற்றுள்ள வரை
தூற்றிக் கொள்ளும்
தன் முயற்சியைக்
கை விடாத
முரட்டுக் கல்
"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்"
என்ற திருக்குறள் பாடத்தையும்
நடத்துகிறது.
உயர்திணை மனிதம்
இம்முறையாவது புரிந்து கொள்ளுமா
முரட்டுக் கல்லின்
உரத்த பாடம்?





Quote:







Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


மீண்டும் அதையெடுத்து
ஓரத்தில் மீட்டனர்
மீண்டும் அதே வழி வந்த
அதே குருவும் அவர் சீடனும்
பாழாய் போன காற்றென்று
மீண்டும் நொந்த படி.


அதே பொய் வேடங்களால்
மீண்டும்
பாழாய்ப் போகுது
முரட்டுக் கல்லின்
உரத்த பாடம்!





Quote:







Originally Posted by எஸ்.எம். சுனைத் ஹஸனீ View Post


ஆடி கழிந்த ஆவணியில்
அதே வழி வந்தான்
அதே குருவின்
அதே சீடன் மட்டும் ஒரு நாள்

ஓரமாய் ஒதுங்கி கிடந்த கல்லை
உருட்டிப் புரட்டி நடு வீதி சேர்த்து
பின் அதை ஓரமிட்டுச் சென்றான்
வீணாய் போன காற்று நமகவென்று
மூன்று தரம் சொல்லியபடி.


கற்குருவின் பாடங் கேட்டும்
காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்ளாத
பொய்க்குரு
இறப்பில் தீர்ந்தார்
பிறப்பில்
மீண்டும் வரும் வரைக்கும்.
ஆடியில் பாடம் நடத்திய கல்
ஆவணி வந்ததும்
ஓரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.
பொய்ச்சீடன் வருகிறார்.
பொய்க்குரு என்ற பீடம்
காலியாக இருக்க
அதை இவரல்லவா
நிரப்ப வேண்டும்!
எனவே
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கல்லை
வலுக் கட்டாயமாய்
உருட்டியும் புரட்டியும்
வீதி நடுவில் வைத்தும்
பின்பு ஓரமிட்டும்
முணுமுணுத்தும்
சில அர்த்தமற்ற
தந்திர மந்திரங்கள் செய்கிறார்.
கற்குருவின் பாடங் கேட்டு
காற்றுள்ள போது
செய்ய வேண்டியதைச் செய்து
தூற்றிக் கொள்ளாமல்
இந்த சீடன் செய்வது
கொஞ்சங் கூட அர்த்தமற்றதாயிருக்கிறது
என்று சொல்லாமல் சொல்லும்
கேலியோடு கவிதை முடிகிறது.



தமிழ் மன்றத்தில் எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களின் "சாத்திரங்களும் சூத்திரங்களும்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டங்கள்.

No comments: