Wednesday, July 9, 2008

வெட்டவெளி தியானம்

வெளியே உந்தன் உட்பொருள்
வெளியே உந்தன் உட்சுத்தம்
வெளியே உந்தன் மெய்யுடம்பு
வெளியே உந்தன் மேலுடுப்பு
வெளியே உந்தன் பெரிய வீடு
வெளியே உந்தன் பேருடைமை
வெளியே உந்தன் மெய்யுறவு

ஒன்று மில்லா வெளியில் ஒன்றாய்
நின்ற நீயும் வெளி

ஒன்று மில்லா வெளியை யழிக்க
ஒன்று மில்லை வெடி

நன்றாய் நின்ற வெளியை அறிந்தால்
பொன்றா துந்தன் வாழ்வு

வெளியே வளியாய் ஒளியாய் அளியாய்க்
களிக்கும் உயிர்மெய் உண்மை



கடத்துள் வெளியே திடமென இருந்தால்
கடப்பாய் இறப்பும் பிறப்பும்

காலி வெளியே காலியாகா திடமென
வாலை ஒளியை நாடு

வெளிதரும் வெள்ளங்கி உடுத்தி களிப்புடன்
வெளிதனில் இருத்தல் சுகம்

வெட்டவெளியே பட்டப்பகல் நிசமென உணர்ந்தால்
பட்டொளியாய் மினுமினுக்குந் தேகம்

சுத்தவெளியின் சுத்தமே மெய்யின் உண்மையெனும்
சித்தத்தெளிவை என்றுமே போற்று

சித்தரே பரிசுத்தரே புத்தரே நீவிர்
சுத்தவெளி உருவெடுத்த உண்மை

வெளியைப் பற்றி வளியைத் தொற்றி
ஒளியுள் உற்றுக் களி

நள்ளிரவிலும் பளபளக்கும் வெட்டவெளியில் கவனம்
கள்ளமனமும் வெளுத்துவிடும் சுத்தம்

மெய்யரே நீரென்றேன் வெட்டவெளி திடப்படும்
மெய்யுடம் பாரென்றேன் நான்

வெளிபற்றி நிற்கும் வளிக்குள் ஒளிதோன்றி
அளிசொட்ட மெய்க்குள் களி

No comments: