எந்நிகழ்வுகளாலும் உடையாத
உடைக்க முடியாத
நித்திய ஜீவனென்னும்
இன்ப உந்துதல்
உன் மூலம்
காலத்தின்
சூழ்நிலைகளின்
கைதி நீயென்று
உன் நிஜ நிலையைத்
தலை கீழாக்கும்
கண்மூடித்தனத்தை
உன் ஆன்ம ஒளியால்
கண்டு கொண்டு
நிகழ்வுகளின் எஜமானனாகு
விரல்களில் சிக்கிய பொருள்
அருவ அருளின் திட உருவமே
என்று மனம் உணர
பொருளின் ஊனம்
அருளில் கரையும்
அஃறிணைகளில் சலனமூட்டும்
அமுதக் காற்று
உயர்திணை உன்னை
ஏன்
இன்னும் உயிர்ப்பிக்கவில்லை?
அருவக் கடவுளின் கருவில்
உருவான அமரக் கவிதை
நீ.
உன்னை உச்சரித்தே
தன் மௌன ஆழத்தை
உணர்கிறான்
கடவுள்.
உன் நுனி நாக்கில்
நடனமிடும்
ஜீவனுள்ள வார்த்தையை
உச்சரிக்க
இன்னுமா தயக்கம்?
உன் மெய்யென்னும்
வெற்றுத் தாளில்
மனப் பேனா
பதியட்டும்
அவ்வார்த்தையின் தடம்
இடமும் காலமும்
முடித்த
பரிணாம முடிவில்
இடமும் காலமும் மீறி
நீ பாய்ந்தால் மட்டுமே
உருவாகும்
உன் புதுப் பரிமாணம்
எழுதாத ஞான தொனி
உன் இருதய குகையில் கேட்டு
ஆன்ம நேயனாம்
இறை தூதனாய்ப்
புத்தனாய்ப்
புது மறை எழுது
அலுவல் பளுக்களை உதறி
நீ
சும்மா இருந்த போது
உன்னில் கீறப்பட்டவைகளைப்
புரிந்து கொள்ளப்
பரிணாமப் பயணத்தின் முடிவில்
நீ
பாய வேண்டும்
வேறு பயணப் பாதையில்
தமிழ் மன்றத்தில் எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களின் "போதி மரங்களும், ஹிரா குகைகளும்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
No comments:
Post a Comment