Wednesday, July 9, 2008

யுத்த வாழ்வு

1


இரவிலும் பட்டப்பகலாய் ஒளிருமொன்று
யாருமற்ற வெறுமையிலும் ஆதரவாய்ப் பேசுமொன்று
இமையாது விழித்திருக்குமொன்று
வாடாது பூத்திருக்குமொன்று
தீராப்பசி தீர்க்குமொன்று
குருவியும் மலையும் உறவாய்ப் பேணுமொன்று
உற்ற நோய் நோன்று உயிர்க்குறுகண் செய்யா மரம் போல் உயர்ந்தவொன்று
சுவர்களை விட்டதால் சேர்ந்த வீடொன்று
பெருவெளியே முற்றமாய் விளையாடும் முதிர்ந்த குழந்தையொன்று
வெந்து கருகாத சிதைந்து சிதறாத உயிர்ப்புள்ள மூலமொன்று
அழியா இன்பத்தின் அமரச் சிரிப்பொன்று
பொய்க்கனவு கலைக்கும் மெய்ச்சுடரொன்று
கல்லறைகளால் மூடமுடியாத நித்திய ஜீவனொன்று
முடைநாற்றப் பிணங்களையும் உயிர்த்தெழுப்பும் சுத்த சமரச சன்மார்க்க சக்தியொன்று
இடிபாடுகளில் இடியாத சிறந்தவொன்று
சிதறல்களில் தெறிக்காத சிவந்தவொன்று
தூக்கத்திலும் விழித்திருக்குமொன்று
துக்கத்திலும் சுகித்திருக்குமொன்று
மூளையின் மறைகள் முழுவதுமாய்க் கழன்று விழ
இருதய குகையில் பெருந்தயவாய் வாழுமொன்று
யுத்த பூமியின் இரணகளத்தில்
சமாதான அணுகுண்டாய் வெடிக்கும்
அன்பெனும் ஆதியொன்றைப் போற்றுவோம்
நவயுக சித்தராய் அவனியில் இன்றே எழுவோம்
சம்மதமா ஆதி!
சம்மதமென்றால்,
"எனக்கு முன்னர் சித்தர் பலர் வந்தாரப்பா!
நானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்!"
என்று அமரகவி பாரதி போல் முழங்க ஏன் தயக்கம்?
"இதை விடப் பெரிய கிரியைகளை என் தந்தையின் கிருபையால்
நீங்களும் செய்வீர்கள்!"
என்ற குருநாதர் இயேசு கிறிஸ்துவின் அருள்வாக்கு நிறைவேறும்
ஞான யுகம் மலர்வதற்கு
"எனக்கு முன்னர் புத்தர் பலர் வந்தாரப்பா!
நானும் வந்தேன் ஒரு புத்தன் இந்த நாட்டில்!"
என்றுமல்லவா முழங்க வேண்டும்!
முழங்குவீரா ஆதி!
யுத்த வாழ்வின் அவலத்தைப் பாடுவதொன்றே போதுமென்று
புத்தி மழுங்கிச் செத்த பிணமாய் நடப்பதொன்றே விதியென்று
மொத்தமாய் உம் ஆன்மாவை மாயைக்கு விற்று விட்டு
மேலான ஒன்றை மறந்து வீழ்வீரோ ஆதி!
காட்டமான கேள்வி தான்
கேட்டதற்காய் மன்னிப்பீர்
சுரணையேற்றவே சுடுகிறேன்
உம்மை மட்டுமல்ல
என்னையுந்தான்
அன்பின் மிகுதியால் செய்த என் வன்செயலைப் பொறுப்பீர்!
சுரணையோடு எழுவீர்
மேலான ஒன்றை இப்போதே நினைவு கூர்வீர்!


2



யுத்த வாழ்வின் இரணங்களில்
என் இதயம் இறைச்சித் துண்டுகளாய்ச்
சிதறிக் கிடக்கின்றன.
அவை இருதய ஒருமையில்
ஒன்று சேரும்
உயிர்த்தெழலின் அதிசயம்
மனித மிருகம்
தேவ மனிதமாகும்
பரிணாமப் பாய்ச்சலில் மட்டுமே
நிகழ முடியும்
வள்ளலே!
உலக உயிர்த்திரளின்
நரக வேதனை
என் மெய்யெங்கும் தாங்கி
மரணக் குழியுள்
குற்றுயிரும் குலையுயிருமாய்
நடக்கிறேன்.
உமதருள் வெள்ளம் பாய்ச்சி
சமாதானப் பெருவாழ்வைத்
தாரீரோ!

அன்பு மகனே!
கருத்த மனத்தை
வெளுக்கும் என் வெள்ளங்கி
வேகமாய்
உலகெங்கும் விரிகிறது.
இருதய ஒருமையில்
சமாதானப் பெருவாழ்வின்
அதிசயம் நிகழ்கிறது.
யுத்த பூமியில்
உன் இருதய வாய் திறந்து
இரு தயவாய்
என் மெய் வழி அதுவே!
மரணப் படுகுழியிலும்
ஜீவித்திருக்கும்
என் மெய் வழி அதுவே!
இரு தயவாய்!


தமிழ் மன்றத்தில் ஆதி அவர்களின் 'யுத்த வாழ்வு' கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதைகள்

No comments: