Wednesday, July 9, 2008

எளிய பிரார்த்தனை

அருவ இருதயத்தின்
பரிபூரண வெளிப்பாடாய்
உருவான சுத்த இதயம்
நாறுமோர் மாமிசப் பிண்டமாய்த்
திரிந்தது எதனால்!?
அவ்வாறு திரித்த மனத்தால்
அதைத் திருத்த இயலாது
வருந்தி மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்க
மாமிசப் பிண்டம்
சுத்த இதயமாய் மாறும்!

மெய்யுடம்பாலயமாம் சுத்த தேகம்
பொய்க்கிடங்காய்த் திரிந்ததேனோ!?
பரமன் தந்த தங்க மெய்யைப்
பாவி மனம் பங்கப் படுத்தித் திரித்ததாலே!
திரித்த மனம் முழுப்பொறுப்பேற்று
வருந்தி மனந்திரும்பிப்
பணிவுடன் மன்னிப்பைக் கோரப்
பரமன் சட்டென வருவான்
திரிந்ததைத் திருத்தி
மெய்யெனும் தங்கமாய் மாற்ற!
ஏனென்றால்
அவன் பெருந்தயாபரன்.
மனிதா
திரிக்க மட்டுமே
உன்னால் முடியும்.
உன்னால் திரிந்ததைச்
சரி செய்யப்
பரமனால் மட்டுமே முடியும்.
திரித்ததற்கான முழுப் பொறுப்பேற்கும்
பணிவும் வீரமும் நேர்மையும்
வருத்தமும் மனத்திருப்பமும்
மன்னிப்பைக் கோரும் அடக்கமும்
உனக்குத் தேவையான
உன் கடமை.
நீ
உன் கடமை செய்யப்
பரமன் கொடுப்பான்
உன் ஜீவ உரிமையாம்
சுத்த தேகத்தை.
ஏனென்றால்
அவன் பேரருளாளன்.

இன்று முதல் எளியனாகி
இந்த எளிய பிரார்த்தனையை
நீ செய்வாய்
"நான் வருந்துகிறேன், மனந்திரும்புகிறேன்.
என்னை மன்னித்தருள்வீர்.
நன்றி ஆண்டவரே!
நான் உம்மை நேசிக்கிறேன்."

திரிந்து தெரியும் தோற்றப் பிழைகள்
திருத்த வருவான் பரமன்.


(பி.கு: மேலே தடித்த எழுத்துக்களில் இருக்கும் எளிய பிரார்த்தனை
"I'm sorry. Please forgive me. Thank you. I love you." என்ற "Ho'opononpono Prayer"ன் தமிழாக்கம். மேலும் அறிய இச்சுட்டியைச் சொடுக்கவும்)

No comments: