Tuesday, July 22, 2008

காதல் பரிணாமம்

என் மார்பின் இடப்பக்கத்தில்
வெறும் இரத்த இயந்திரமாய்
இயங்கியதை
நீ தான்
இருதயமாக மாற்றிப் போட்டாய்

ஐந்து விரல்கள் இருந்தும்
என் வலக்கரம்
வெறும் சதைப் பிண்டமாகத் தான்
இருந்தது
நீ தான்
அதில் ஆறாவது விரலை
மூளைக்க வைத்து
அதை உயிர்ப்பித்தாய்

பளிங்கில்
வெறும் மாய பிம்பமாகத்
தெரிந்த என் தலையை
என் கழுத்துக்கு மேலே
நீ தான்
வித்திட்டு வளர்த்தாய்

நீ
என்னைத் தொட்டாய்
உலர்ந்த விரகாய் இருந்தவன்
ஈரமுள்ள மரமாய் உயிர்த்தேன்

நீ
என்னோடு பேசினாய்
இலையுதிர்ந்து நின்ற
என் தலைக் கிளையில்
காதுகள் துளிர்த்தன

நீ
என்னைப் பார்த்தாய்
புலன்களை மூடிய திரை
கிழிந்து
என் மனம் தெளிந்தது

நீ
என் உடல் மீது
உன்னையே உடுத்தினாய்
மெய்யென்ற தமிழ்ச்சொல்லின்
பொருள் விளங்க
ஒளிர்ந்தது என் உடம்பு

நீ
சடலமாய்க் கிடந்த
என் உடலுக்குள்
உயிராகப் புகுந்தாய்
உயிர்மெய் ஒருமையின்
உண்மை விளங்கி
நான்
உயிர்தெழுந்தேன்

நீ
இகவுலகப் பாலையில் விழும்
பரம்பொருள் மன்னாவாய்
என்னகம் விழுந்தாய்
இகத்திலேயே
பரமானந்த வீடு பேறு
எய்தினேன்
நான்

No comments: