Wednesday, April 30, 2008

காக்கைகள்

மரத்தில் பூக்குமா
கருப்பு மலர்கள்
ஓ.... காக்கைகள்

மரத்தில் பூத்து
விண்ணில் உதிரும் மலர்களா
காக்கைகள்

ஒளியை ஊடுருவிப் பாயும்
இருளின் கீற்றுகளா
காக்கைகள்!!!

மர வானில் மின்னும்
கருப்பு நட்சத்திரங்களோ
காக்கைகள்

பட்டப்பகலிலும்
விடியாத இரவின் திட்டுகளோ
காக்கைகள்

எழுதா அதிசயம்

காற்று
என்னருகே
கொண்டு போட்டது
அழகிய
அச்செம்பூவின்
ஓரிதழை

நான்
கவிதை எழுதும்
நோட்டுப் புத்தகத்தின்
எழுதாத
இரு பக்கங்களுக்கிடையே
அவ்விதழைப்
பத்திரமாய்
வைத்தேன்

அதைப் பார்த்த
என் மனைவி
எதற்கென்று
கேட்டாள்

உலர
உலர
அழகு கூடும்
அதிசயங் காண
என்றேன்

அப்பக்கங்களில்
என் எழுத்து மழை
விழாதிருக்க
விரித்து வைத்த குடையாக
அவ்விதழ்
உலர்ந்து கொண்டிருக்கிறது
அழகு கூட
அழகு கூட

என் மனைவியிடம்
சொன்னேன்:
"நான்
எழுதிய
எந்தப் பக்கங்களையும்
நீ படிக்கா விட்டாலும்
எழுதாத
இவ்விரு பக்கங்களைக்
கண்டிப்பாகப்
படி
அடிக்கடி
அடிக்கடி.
அவ்விதழில் தான்
என் எல்லா வார்த்தைகளின்
அர்த்தமும்
புதைந்திருக்கிறது.
ஒரு பக்கம் நீ
மறு பக்கம் நான்
இடையே
நம் மகளுக்குள்
நம் அர்த்தங்களெல்லாம்
புதைந்திருப்பதைப்
போன்று."

Tuesday, April 29, 2008

அறுந்த மரத்தின் அடித்தண்டு

அங்கே அறுந்த மரத்தின் அடித்தண்டு
இங்கே இரத்தங் கசிகிறது
என்னெஞ்சு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அறுந்து கிடப்பது
உன் உடம்பென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
மனிதம் மிருகமாகக்
கழிந்ததொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
திறந்தது மண்ணின்
நெற்றிக் கண்ணொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ அறுத்தது
அன்னை பூமியின் முலையொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
ஈரம் போன மண்ணில்
நெருப்பைக் கக்கும் வாயொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
மனிதத்தின் சவப்பெட்டியில்
இறங்கும் ஆணியொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா சுற்றி முளைக்கும் செடிகள்
உன்னை நியாயங் கேட்குதென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அதுவுன்
உயிரைக் குடிக்கும் விஷ முள்ளென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
நன்றி கொன்றவன் நீயென்று
உன்னைச் சுட்டும் விரலொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அதுவுன்
நெஞ்சில் ஆறாத வடுவென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ களைந்தது
பூமித் தாயின் சேலையென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ சிதைத்தது
பூமித் தாயின் மடியென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அங்கே சிந்தியது
கழுவவே முடியாத இரத்தக் கரையென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
இரு கால் மிருகமே ஏன் விட்டுச் சென்றாய்
இங்கொரு மாமிசத் துண்டு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
ஈரமில்லா வன்னெஞ்சின்
வரண்ட துண்டு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
போதுமடா மனிதா நீ செய்த நாசம்
செய்வாய் இனி மரம் வளர்க்கும் தொண்டு

Monday, April 28, 2008

கலகம்

வெள்ளைச் சுவர்

உறிஞ்சிய இரத்தமெல்லாம்
உறைந்து
உள்ளே செங்கற்களாய்

எரிந்த எலும்புகளின்
சாம்பலையும்
புதைந்து மக்கிய உடம்புகளின்
மணலையும்
கண்ணீரிலும்
வியர்வையிலும்
கலந்து செய்த
சிமெண்டுக் கலவையில்
பிணைக்கப் பட்டு
வெளியே
பூசி மழுப்பப்பட்டு
அழகாகக் காட்சி தரும்
வெள்ளைச் சுவர்

சமாதானம்
சமாதானம்
சமாதானம்
என்று சதா போதிக்கிறது

இன்னொரு வெள்ளைச் சுவருக்குக்
கச்சாப் பொருளாகித்
தொலையுமுன்
இந்த வெள்ளைச் சுவரைத்
தகர்க்கப் போகிறேன்
நான்

இதன் பின்
ஏமாற்றும்
ஒவ்வொரு வெள்ளைச் சுவரையும்
தகர்ப்பேன்

சமாதானங் கற்றுப்
பிணமாவதிலுங்
கலகக்காரனாய்
வாழ்வதே மேல்

கலகம்
கலகம்
கலகம்
வாழ்வின் போர்ப்பறை
கேட்கிறது

வெள்ளைச் சுவர்கள்
அதிர

கோடுகளுக்குள்

சிற்றெறும்புகள் கூடக்
கோடுகளைத் தாண்டிக்
கோடுகளைத் தாண்டித்
தரையில்
ஊர்கின்றன

மனிதர்களோ
கோடுகளைத் தாண்டினால்
தீ மூளுமென்று
பயந்து
கோடுகளுக்குள்
குந்திக் கிடக்கிறார்கள்

யாரோ
எதற்கோ
என்றோ
கிழித்த கோடுகளை
ஏன் தாண்டக் கூடாது
என்ற விவேகக் கேள்வியையும்
சந்திக்க பயந்து

கோடுகளுக்கு வெளியே
புதியதோர் உலகம்
காத்துக் கிடக்கிறது

கண்டுபிடிக்க்கப் படாமல்

செவ்விதழின் அருங்கவிதை

எழுதப்படாத
அவ்விரு பக்கங்களுக்கிடையே
சில நாட்களுக்கு முன்பு
வைத்திருந்த
செம்பூவின் இதழைப்
பார்த்தேன்

அதன் பேரழகைப் பற்றிப்
பறைசாற்ற
அப்பக்கங்களுக்கு
என் வார்த்தைகளே
தேவைப்படவில்லை

என் வார்த்தைகளோ
அப்பேரழகின் போதையில்
மயங்கித்
தம் பேச்சிழந்தன

பேச்சிழந்ததால்
அவ்விதழ் சொன்ன
அருங்கவிதை
என் செவிகளில்
விழுந்தது

அதைக் கேட்டதும்
வேறெந்தக் கவிதையும்
எனக்குப்
பிடிக்காமல் போனது

அவ்விதழ் சொன்ன
அருங்கவிதை
எழுத
என் மூளையும்
இருதயமும்
எழுதப்படாத
அவ்விரு பக்கங்களாக
வேண்டும்

ஓர் அமைதியான இரவில்
என் எல்லாக் கவிதைகளையும்
கொளுத்தி
அந்த வெளிச்சத்தில்
அருங்கவிதை அதைப்
படிக்க வேண்டும்

அப்போது தெரிந்துவிடும்
என் வார்த்தைகளின்
வெறுமையும்
வார்த்தைகளை மீறிய
அச்செவ்விதழின்
முழுமையும்

காதல்.....

துயரங்களிலிருந்து நழுவிய கவனம்
காதலின் தூய்மையில் நிலை கொள்ள


சுமைகளிலிருந்து நழுவிய கவனம்
காதலின் சுகத்தில் நிலை கொள்ள


சலனங்களிலிருந்து நழுவிய கவனம்
காதலின் சந்தோசத்தில் நிலை கொள்ள


மனச் சோர்வுகளிலிருந்து நழுவிய கவனம்
காதலின் மகிழ்ச்சியில் நிலை கொள்ள


வசதிகளிலிருந்து நழுவிய கவனம்
காதலின் உயிர்மையில் நிலை கொள்ள


காமப் பிணைப்பிலிருந்து நழுவிய கவனம்
காதலின் நிலையான இன்பத்தில் நிலை கொள்ள


காதலின் விந்தையில்
காதலின் வியப்பில்

நீ
இலயித்திருக்கும்
ஒருமித்திருக்கும்
உன் புது அவதாரம்
நன்று தங்காய்!

கவனமாயிரு
கவனந்திரும்பி
உன் அவதார நோக்கம்
பங்கமாகாமலிருக்க
அதி கவனமாயிரு

கவனம்

எல்லாந் தழுவிய
காதலெனும் ஒருமையில்
முழுமையில்
ஊன்றியே
எப்போதும் நில்


அவ்வாறு நிற்றலே
உன் அவதார நோக்கம்

கவனம்

உன்னை இவ்வாறு
எச்சரித்து
அச்சுறுத்தி
நச்சரவு செய்வதே
நாகமென் அவதார நோக்கம்

கவனம்

காதலே வாழ்வு

காதலெனும் ஒருமை
நழுவிய கணமே
மரணம்

முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "காதல்..." கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

சொல் வித்தை

இருதய
மூளை
முனைகளில்
இழுத்துக் கட்டப்பட்டு
நாணேற்றப்பட்ட
நரம்பு

வளைகிறேன்
நான்

புறப்பட்டுவிட்ட
சொற்களின் குறியிலிருந்து
தப்ப முடியாமல்
நீ

சொற்களின் கூர்முனைகள்
உன் புலன்களை ஊடுருவும்
இன்ப வேதனையை
நீ
அனுபவிக்கும் வரை
இன்னொரு வளைதலுக்காய்க்
காத்திருக்கிறேன்
நான்

நம் இருப்பின் நிஜம்

உனைக் காண
எனைத் தொலைத்தேன்

புதியன கூடப்
பழையன கழிந்தேன்

தோல்விகளின் தோலுரித்து
காலத்தை வென்று
திமிர்ந்த ஞானச் செருக்கோடு
பூமியில் நடந்தேன்

தீட்சண்ய விழிகளில்
உன் நிஜங் கண்டு
நமைப் பிரிக்க எழுந்த
மாயச் சுவர்களைப் பிளந்து
உனைக் கூட வந்தேன்

ஊன விழி மூடி
ஞான விழி திறந்து
இல்லாது
நீ இருப்பதை உணர்ந்து
இருப்பதாய் நடிக்கும்
ஆணவத்தின் ஆர்ப்பாட்டம் முடித்தேன்

சுழியும் நெற்றியுள்
உன் முழுமை கண்டு
தொண்டையுள்
வழியும் சுழிக்குள்
என் மெய் சிக்க
பொய்யுலகக் கணக்கைக்
கழிந்தேன்

இருள் சேர் இரு வினையின்
கருவினைக் கலைத்து
ஒருமையில்
உனைச் சேர்ந்தேன்

பொய்த் தளைகளிலிருந்து
கவனம் கழல
மெய்ப் பொருளாம்
உன்னில் இலயித்தேன்

கனவுகள் கலைந்த
ஞான விழிப்பில்
பேதங்களற்று
நீயானேன்
நானே

தமிழ் மன்றத்தில் பூமகளின் "தொலைந்த நினைவு..!" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

Sunday, April 27, 2008

மேற்கைச் செதுக்கடா மானுடா

வீரியம் போனது எங்கே - நல்ல
காரியம் தூங்குது இங்கே
சூரியன் செத்ததா மேற்கே - வந்த
காரிருள் திசைகளைத் தின்றதா

கனவுகள் கண்களைத் தின்றதா - தோளில்
தினவுகள் தீர்ந்தும் போனதா
முடக்கம் உடம்பைக் கொன்றதா - அதில்
அடங்கும் உயிரும் சென்றதா

மேற்கைச் செதுக்கடா மானுடா - அதை
மாற்றிக் கிழக்காய்ச் செய்யடா
சிதறும் மேற்கின் சில்லுகள் - புது
உதயம் சேர்க்கும் பூமியில்

வீரியம் இருக்குது இங்கே - நல்ல
காரியம் சிறக்குது இங்கே
சூரியன் செத்தால் என்ன - புதுச்
சூரியன் செய்யடா மானுடா

காரிருளை உருக்கடா மானுடா - எழுதும்
வீரிய மை உருவாக்கிப் போடடா
காரிருளை நிரப்பிய பேனாக்கள் - கவிதைச்
சீரெழுத விடியும் கனாக்கள்

வயிர உள உழுதலிலே

அழுத விழி
தொழுத கரம்
விழுந்த மதி
தளர்ந்த நடை
பழுது இவை.
வயிர உள உழுதலிலே
எழுச்சியுண்டு.

தோழனே!
விடிந்த விழி
வலிய கரம்
தெளிந்த மதி
மதர்த்த நடை
இவற்றொடு நீ
களத்தில் கருத்தொடு நில்.
வயிர உள உழுதலிலே
எழுச்சியுண்டு.

மாய அல்ல நீ
கருவின் இருளினின்று
வெளி வந்தாய்.
பரிதி சுற்றிச்
சறுக்கும் ஞாலத்தில்
கருத்தின் இருளறுத்துச்
சாவை வெல்ல
அரிதாய்ப் பிறந்தாய்.

வினவாமல்
விடைகளுண்டு.
தரங்கெட்ட இச்சமுகத்தில்
வினவுதற்குத்
தடைகளுண்டு.
சிந்தைச் சிதைவைப்
போற்றும்
பரமனின் படைகளுண்டு.
எண்ணங் கலங்கிய
எழுத்து நடைகளுண்டு.
பிரிவுகள் விற்கும்
சாத்திரக் கடைகளுண்டு.
ஞானம் பேசும்
காவி உடைகளுண்டு.
மனித உருவில்
மேயும் மாக்களுண்டு.
இந்த இருண்ட நிஜங்களின்
குருட்டுத் தாக்கல்
எதிர்த்து நீ
களத்தில் கருத்தொடு நில்.
வயிர உள உழுதலிலே
எழுச்சியுண்டு.

புதுயுக விடியல்

அதோ
தெரிகிறது
புதுயுக விடியலின்
வெளிச்சம்!

மடியும்
மடமையிருளின்
குருதி பூசிச்
சிவந்த
புரட்சிப் பூக்களில்
சிரிக்கும்
புது வசந்தமே!

பண
மன
வறுமைகள்
நிற
இனப்
பிரிவுகள்
சாதி
மதப்
பிளவுகள்
இவற்றின்
கல்லறைகளிலிருந்து
மனிதன்
கருவறையில்
தொலைத்த
தன் ஆறாவது அறிவை
மீட்கிறான்.

வேருங் கிளையும்
இலையுங் காயும்
மலருங் கனியும்
தங்கள்
சாயலும்
செயலும்
உறங்கச் செய்த
மரவின
ஒருமையுணர்வை
ஞாபகங் கொள்ளும் நாள்
அதோ
தெரிகிறது
புதுயுக விடியலின்
வெளிச்சம்!

Saturday, April 26, 2008

துடிதுடிக்குது கவிதை

மேலே
இன்னும் மேலே
இன்னும் இன்னும் மேலே
சுழன்று
சுழன்று
சுழன்று
பறந்தேறுது
தும்பி

கீழே
இன்னும் கீழே
இன்னும் இன்னும் கீழே
சுழன்று
சுழன்று
சுழன்று
மயங்கி விழுகுது
சருகு

அந்தரத்தில்
இரண்டும் வசப்படாது
ஏங்கி
இன்னும் ஏங்கி
இன்னும் இன்னும் ஏங்கி
பார்த்துப்
பார்த்துப்
பார்த்துத்
துடிதுடிக்குது
கவிதை

பொம்மைக் கொலு

நவராத்திரியா!
பொம்மைகள் எதற்கு?
வேறென்னவாம் நீங்கள்.....

மழைக்குப் பின்

ஓய்ந்தது மழை
கம்பிகளிலிருந்து
இன்னும் உதிராத
முத்துக்களைத்
தன் கதிர்களில்
கோத்தெடுத்துச் செல்கிறது
சூரியன்

"முடியும்!"

"முடியாது."
என்பது செத்துப் போன பிணம்

"முடியுமா?"
என்பது காண முடியாத பேய்

"முடியும்!"
என்பதே வாழும் மனிதம்

அஃறிணைகள்
முன்னிரண்டையும்
சொந்தம் கொண்டாடும்
சுடுகாடு

உயர்திணை
மனிதத்துக்கு
சொந்தமாகும்
வளநாடு

"முடியாது."
முடங்கியிருத்தல்

"முடியுமா?"
முடங்கியிருக்க யோசித்தல்

"முடியும்!"
முனையிலே முகத்து நின்று
எண்ணியது முடித்தல்

முன்னிரண்டும்
நெளியும் புழுவினும்
இழிநிலை

"முடியும்!"
மனிதத்தின்
அமர நிலை

கூண்டை உடை

உன்னால்
எவ்வளவு உயரப் பறக்க முடியும்
என்பதல்ல கேள்வி

உனக்குச்
சிறகுகள் இருப்பதை
முதலில் அறி

அலகுகள்
தானியங் கொத்த மட்டுமல்ல
அடைந்து கிடக்கும் கூண்டை
உடைக்க அறிந்த வல்லவை தாம்
எனபதை ஞாபகங் கொள்

கூண்டை உடைத்துச்
சிறகை விரித்த பின்
நீ
பறக்க முடிந்த வானத்திற்கு
எல்லையில்லை

வானத்திற்கு வந்த பின்
உன்னால்
எவ்வளவு உயரப் பறக்க முடியும்
என்பதல்ல கேள்வி

இன்னும் மேலே
இன்னும் மேலே
இன்னும் மேலே
எழும்பி
எழும்பி
எழும்பியும்
தீர்ந்து போகாது
வானம்

இதை
நீ
அறியவும் முடியாது
பறந்தாலொழிய

அந்தக் கேள்வி தான்
நீ
அடைந்திருக்கும் கூண்டு

கூண்டை உடைத்துச்
சிறகை விரி

இப்போதே

மிருகமும் மனிதமும்

நான்கு கால்கள்
கூட்டினால் ஒன்று
இயற்கையின் கணக்கில்
மிருகம்
அடைந்துவிட்டது முழுமை

இரண்டு கால்கள்
கூட்டினால் அரை
இயற்கையின் கணக்கில்
மனிதம்
அடையவில்லை முழுமை

அரைக்கு மேலே
முயன்று எழுந்தாலொழிய
மனிதம்
முழுமையாதல் அசம்பவம்

அரைக்கு மேலே
மிக மிக உயரத்தில்
வைக்கப்பட்டிருக்கிறது
தலை

கால்கள் இரண்டும்
இல்லையென்றாலும்
மனிதம்
முழுமையாக முடிவதே
எண் சாண் உடம்புக்குப்
பிரதானமான
அவ்வொன்றால் தான்

தலையின்றேல்
பூஜ்ஜியந் தான்
தலையிருந்தும்
பயன்படவில்லையென்றால்
மனிதம்
முழுமையடைய முடியாத
அரை தான்

இயற்கையால்
படைக்கப் பட்டிருக்கிறது
ஒரு பாதியாய்
மனிதம்
அரைக்கு மேலே
முயன்று எழுந்தாலொழிய
மனிதம்
முழுமையாதல் அசம்பவம்

புரிதல்

வானம்
வார்த்தைகளால்
விவரிக்க இயலாதவாறு
விரிந்து கிடக்கிறது.
வாயடைத்துப் போய்ப்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
சின்னஞ்சிறு சிட்டொன்று
குறுக்கே
வேகமாய்ப் பறக்கிறது.
சிறகுகள்
எனக்கும் இருப்பது
சட்டென
நினைவில் வர
உடனே
அவை விரிய
வானம் புரிகிறது.

உன்னால் முடியுமடா தம்பி

முடியும் முடியும் முடியும்
உன்னால் முடியுமடா தம்பி

விடியும் விடியும் விடியும்
நீ விழித்து விட்டால் தம்பி

அறுந்த காலும் முளைக்கும்
மேலே எழ முயன்றால் தம்பி

அறுந்த கரமும் துளிர்க்கும்
ஒன்றைச் செய முனைந்தால் தம்பி

இரும்புச் சிறைகள் உடையும்
நீ நினைத்து விட்டால் தம்பி

விண்ணும் மண்ணும் சிலிர்க்கும்
நீ எழுந்து விட்டால் தம்பி

எண்ணும் இலக்கு முடியும்
நீ நடந்து விட்டால் தம்பி

பண்ணும் சிறப்பால் நிற்பாய்
நீ சரித்திரத்தில் தம்பி

முடங்கிக் கிடக்க வேண்டாம்
நீ களத்துக்கு வா தம்பி

முனையிலே முகத்து நின்றால்
நீ வென்றிடுவாய் தம்பி

வறுமை வறுமை வறுமை
இனவேர் அறுக்கும் தம்பி

பொருள்செய் பொருள்செய் பொருள்செய்
உன்னினம் உயரும் தம்பி

அருள்கொள் அருள்கொள் அருள்கொள்
மனிதம் உய்யும் தம்பி

வலிமை வலிமை இன்றேல்
நலியும் நன்மை தம்பி

வளமை வளமை வளமை
உலகம் மதிக்கும் தம்பி

பொருளும் வலியும் வளமும்
நீ செய்து விடு தம்பி

அருளாலே உலகை நன்றாய்
நீ ஆண்டு விடு தம்பி

முடியும் முடியும் முடியும்
உன்னால் முடியுமடா தம்பி

விடியும் விடியும் விடியும்
நீ விழித்து விட்டால் தம்பி

எழுஎழு இக்கணம்

பாதை தெரியுது ஜன்னலின் வழியே
பாதங்கள் இருக்கு கதவைத் திறக்க
நடந்தால் போதும் இலக்கைச் சேர
முடக்கம் உதறி முனைப்போ டெழுந்தால்
முடியும் நினைத்தது திண்ணம் திண்ணம்
அடியெடு மண்ணும் விண்ணும் உன்வசம்
விழிதிற நிச்சயம் விடியும் வாழ்க்கை
வழிஉள அறியும் விளக்கும் உன்னிடம்
எழுஎழு இக்கணம் மெய்தான் மெய்தான்
விழுந்துநீ கிடப்பது அறிந்திடு அறிந்திடு
எழுந்துநீ நிற்பதும் மெய்யே மெய்யே
எழுந்தால் மனிதா நீயே கடவுள்
விழுந்தே கிடந்தால் புழுவினும் இழிஞன்
எழுஎழு இக்கணம் அமர தேவமாய்

எது நிஜம்!?

எது நிஜம்!?
ஒளிரும் விண்மீனா
மேக மூட்டமா!?
கரிய இரவில்
இருண்ட வானில்
கண்ணுக்குப் புலப்படாத
விண்மீனைக்
கண்டு விட்டால்
நிஜம் வேறாய்
நிஜத்தின் நிஜம் வேறாய்ப்
புரிந்து விடும்.
மேக மூட்டத்தைக்
கண்டும் காணாமல்
ஒளிரும் விண்மீனைக்
காணாமல் கண்டும்
நிஜம் மீறும்
தீர்க்கப் பார்வைகளால் தான்
ஞானம் கிட்டும்.
அது வரை
எது நிஜம்
என்ற கேள்வியும் எழாத
அஞ்ஞானமே
உன் நிஜத்தின் நிஜம்.

Friday, April 25, 2008

புதுமை

இது வரை பார்த்தேயிராத
புதிய பறவைகள்
பறந்தன வானில்.
விஷயந்தேடி வந்தவனை
விரிந்த வானம்
வியப்பிலாழ்த்த
எண்ணக் கவணிலிருந்து
விடுபட்டன சொற்கள்.
சொற்களின் குறி தப்ப
வசப்படாது மறைந்தன
பறவைகள்.
விழுந்த சொற்களைப்
பொறுக்க
குனிந்த போது
இது வரை பார்த்தேயிராத
புதிய பூக்கள்
சிரித்தன மண்ணில்.
சொற்களையும் பொறுக்காமல்
பூக்களையும் பறிக்காமல்
எண்ணக் கவணைச்
சுழற்றிக் கொண்டே
மன வெளியில்
சும்மா நடந்தேன்.
இது வரை பதித்தேயிராத
புதிய சுவடுகள்
விழுந்தன தாளில்.

கவிதைப் பாய்ச்சல்

காகிதத்தில்
நின்று
ஊர்ந்து
நின்று
ஊர்ந்து
மிக மிக மெதுவாக நகர்ந்த
அச்சிறு பூச்சி
திடீரென்று
அசுரப் பாய்ச்சலாய்ப்
பறந்து மறைந்தது
நம்பவே முடியாதவாறு.

தமிழனின் உறக்கம்

விடிந்துவிட்டது
வடமொழி சுப்ரபாதம் தாலாட்ட
ஆழ்ந்த உறக்கத்தில் தமிழன்

Thursday, April 24, 2008

சொல்லாமல் சொல்லிவிட

கடந்தாயிற்று
கடைசிச் சுவர்.
அடைந்தாயிற்று
அதிசய வீடு.
பேரா இயற்கையாய்ப்
பேரானந்தம்
சொற்கடந்ததேயாயினும்
வீடு விட்டு
சுவர்களின் வியூகத்துள்
புகத்தான் வேண்டும்
சொல்லாமல் சொல்லிவிட.

வீடு

காட்டு வழியில்
தொலைந்து போன என்னைத்
தேடாதீர்
இந்த சுவர்களுக்கிடையே.
வீடென்பீர்
விடாமல்
இத்தளைகளைப் பற்றி.
வீட்டைத் தேடிச்
சுற்றிச் சுற்றி அலுத்து
விட்டு விட்டேன்
சட்டெனக் கண்டு விட்டேன்
காட்டு வழி.
பழகாத பாதையில்
பாதம் பட்டதும்
கற்களும் முட்களும்
என்னை மீட்டியதும்
மௌன குரு
முன்னே வழி காட்டியதும்
எப்படிச் சொல்வேன்
உமக்கு?!
சுவர்களை எழுப்பிக்
கட்டுவதை
வீடென நம்பும் உம்மிடம்
சுவர்களைத் தகர்த்து
உறுதியாய் வீடு கட்டும்
காட்டுக் கலையைக்
காட்ட முடிந்தால்
இக்கவியெதற்கு?!

Wednesday, April 23, 2008

சிறை வாசம்

இந்த சிறைக்குள்
இன்னும்
எத்தனை நாள்?!

நூலிழைக் கம்பிகளை
ஓர் நொடியில்
அறுக்க முடியும்.

அங்கங்களை அசைக்கத்
தலை
உத்தரவிட்டால் போதும்.

தலையோ
வேறு யாருக்கோ
அடங்கிக் கிடக்கிறது
அங்கங்களெல்லாம்
முடங்கிக் கிடக்க.

யாரோ
ஏதோ
உத்தரவிட
தலை
யோசிக்காமல்
ஆடிக் கொண்டிருக்கிறது.

சிறை வாசம் தொடர்கிறது.

ஆட வைத்து
ஆட வைத்து
தலை கழற்ற
சதி நடக்கிறது.

விதியென்று
கதி கெட்டு
மதி நம்ப
ஆட்டுவோரைத்
துதி செய்து
சிறை வாசம் தொடர்கிறது.

உன் முகம்

பளிங்கில் தெரிவதா
உன் முகம்!?

பளிங்கின் எல்லைகளுக்கு
அப்பாலல்லவா
அது இருக்கிறது!

செவிடான
குருடான
ஊமையான
உணர்வேயற்ற
மாய பிம்பம்
புதைந்து கிடக்கும்
பளிங்கைத் திருப்பு.

பாதரசச் சிவப்புக்கு
உன் முகத்திலிருந்து தானா
இரத்த தானம்?!

போதும் நிறுத்து.

பிழைக்கட்டும்
உன் முகம்.

Tuesday, April 15, 2008

வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 2

என்றென்றும் என்ற ஆதியாய்த் தொடங்கி
இருக்கிறேன் என்ற அந்தமாய் முடியும்
அருட்குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றுள்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை அடக்கம்.

இம்மருட்பொய்யுலகில்
என் அருண்மெய் விளங்க
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையின்
திட வடிவமாக
உன்னை நிறுத்தி
உன் உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால் வரை
நானே
எழுந்தருளியிருக்கிறேன்.

எனவே
என் அன்பு மகனே(ளே)!
எதற்கும்
நீ
கலங்க வேண்டாம்.
"எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்"
என்ற
சுடச் சுடச் சுடரும் வார்த்தைகளால்
உன்னை அறைந்து
உன் இருதய வாய் திறந்து
ஆதி
அந்தமாம்
என் மந்திரத் திரு உருவில்
உன்னை
நிற்க வைத்து
உன் நடுவே
"இரு தயவாய்"
என்ற பேருபதேசம் முழங்கி
அதன் பொருள் விளங்கி
உலக உயிர்த்திரள் அனைத்தும்
நித்தியப் பெருவாழ்வில் உய்யும்
மெய்வழி காட்டி
உன் தாள்களின் தூசுகளில்
என் தாள்களின் தூசுகள் படிய
உன்னோடு வேறற ஒன்றி
நிற்கிறேன்
நான்.

நீ
என் மந்திரத் திரு உருவிலும்
நான்
உன் மெய்யுடம்பாலயத்திலும்
வேறற ஒன்றி
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நிற்பதால்
இஞ்ஞான யுகத்தில்
அஞ்ஞான மாயையின்
பொய்யான பேயாட்டம் முடிந்து
என் மெய்ஞ்ஞானத் திருக்கூத்து தொடங்கும்.
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை வெல்லும்.
அதன்
திட வடிவமாம்
நீ
நித்தியப் பெருவாழ்வில்
நிலைபெறுவாய்.
இது சத்தியம்.

திருஅருட்பிரகாச வள்ளலாரென்ற
உன் அம்மையப்பனாம்
அருட்பெருங்கடவுள்
நான்
ஆணையிட்டுக் கூறுகின்றேன்.
இது சத்தியம். இது சத்தியம். இது சத்தியம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருட்செலவம்

அலைபாயும் மனம்
மறந்த ஆதியாம் இருதயத்தில் அடங்கப்
பாயும் அருளே
பொருளாம்
அந்தம்
அறிக சிவா
ஏளனமாய்ச் சிரிக்கும்
உம் உள்ளத்தின் உள்ளுள்ளே
நீவிர் ஆழ ஆழ
மூளையின் மறை கழன்று
சுதந்திரமாய்ச் சுழலும் செல்கள்
ஒவ்வொன்றும் உமக்குச் சொல்லும்
"செல்வத்துட் செல்வம் அருட்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
"

தமிழ் மன்றத்தில் சிவா அவர்களின் "ஏளனச் சிரிப்பு!!!" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 1

மெய்யென்ற பேர் பெற்ற உடம்பை
பிணமென்றே ஊர் சொல்லப்
பொய்யாக்கும் மரணம்

மண்ணிலிட்டோ தீயில் சுட்டோ
நசிகின்ற சடலந்தான்
உடம்பென்றால்
மெய்யென்ற பேர் ஏனோ!

மரணத்தைப் பொய்யாக்கி
உடம்பைப் பேருக்கேற்றபடி
மெய்யென்ற பொருளாக்கி
உய்யும் வழி சொல்லும்
உயிர்ப்புள்ள மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
"என் ஏழாந் திருமறை இது"
என்றே எனக்களித்த
வள்ளலே!
திருஅருட் பிரகாசரே!
சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கும்
உம் ஏழாந் திருமறை வெல்லுமா?
அல்லது
மரணப் பேய்
என் உடம்பை விழுங்குமா?

அன்பு மகனே!
ஐயம் வேண்டாம்
என் ஏழாந் திருமறை
நிச்சயம் வெல்லும்.
பத்தும் ஒரு மூன்றாம்
அருட்குரு மந்திர தாரணையில்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நில்.
உன் "இருதய வாய்" திறக்கும்.
"இரு தயவாய்"
என்ற என் பேருபதேசப்
பொருள் விளங்கும்.

ஐயனே!
ஏதுமிலா ஏழையெனை
சூதுமனக் கபடனெனை
நெஞ்சில் ஈரமிலா
வஞ்சக வன்பனெனை
அறிவிலா எத்தனெனை
மறை கழன்ற பித்தனெனை
ஜீவனுள்ள
உம் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கப் பணிக்கும்
உம் சித்தம்
எனக்கு
ஒரு சிறிதும் விளங்கவில்லை.
இருந்தாலும்
அவ்வாறு நிற்பது நீரே
என்ற உறுதியுடன்
உம் வெள்ளங்கியுள்
கருத்த என் மனமடங்கி
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கிறேன்.

அன்பு மகனே!
அருட்பெருஞ் செல்வனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
சுந்தர இருதயத் தூய சித்தனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
தனிப்பெருங் கருணையனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
அருட்பெருஞ் ஜோதியனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நாயகனாம் வாலறிவனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
மெய்ஞ்ஞானத் திருமறையோனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நீ மட்டுமன்றி
எங்கும் எதிலும் எப்போதும்
பரந்து விரிந்திருக்கும்
என் வெள்ளங்கியுள்
கருத்த தம் மனமடங்கி
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்க முனையும்
என் அன்பு மகன்(ள்) ஒவ்வொருவரும்
இன்று முதல்
அருட்பெருஞ் செல்வரே!
சுந்தர இருதயத் தூய சித்தரே!
தனிப்பெருங் கருணையரே!
அருட்பெருஞ் ஜோதியரே!
நாயகனாம் வாலறிவரே!
மெய்ஞ்ஞானத் திருமறையோரே!
உண்மையிது
வெறும் புகழ்ச்சியில்லை
ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்!
உன் உள் மெய்யாம் உண்மையாய் உறையும்
உன் உள் மையாம் வெண்மையாய் ஒளிரும்
என் அருளொளியின்
உண்மையிது
!
சத்துணவாய் ஏற்று
உண் மை இதை
இன்றே
இப்போதே!
"வள்ளலே!
உன் வள்ளன்மைக்கு
உண்டோ ஈடு
!"
என்ற உன் தந்திர வாக்கை
இன்று பலிக்க வைத்தேன்
உன் அம்மையப்பனாம்
நானே
!

Monday, April 14, 2008

உயிர்மெய்

மரத்தில் எழுந்தால் பெயர் இலை
மண்ணில் விழுந்தால் பெயர் சருகு
மரத்தில் எழுந்து மண்ணில் விழுந்து
மண்ணில் விழுந்து மரத்தில் எழுந்து
பெயர்களில் அடைபடாதும்
இயக்கம் தடைபடாதும்
சுதந்திரமாய்ச் சுழலும் மெய்ப்பொருள்
எப்போதும் உயிர்த்தே இருக்கிறது
எங்கும் எதிலும்

தேவி பக்தி!

கும்பிடப் பெண் தெய்வம்
கொல்லப் பெண் சிசு
கர்ப்பக் கிரகத்தில்

Sunday, April 13, 2008

இரு தயவாய்!

வள்ளலே!
வெட்டவெளி வீட்டில்
வானக் கூரையின் கீழ்
உம் அருளொன்றே பொருளாய்
உம் வெள்ளங்கியே உடையாய்
உம் மெய்யே உடம்பாய்
உம் ஜீவனே மூச்சாய்
அறிந்த எல்லாம் விட்டு
எல்லாம் அறியும் அறிவைப் பற்றித்
தனை மறந்து மனமடங்கி
வெறும் “நான்” என்று காலியாகி
உம் வழியாய்
இவ்வுலகில் இனிதே இருக்க
இருதயங் கனியும்
நாள் எந்நாளோ!”
என்றே ஏங்கினேன்.

உடனே
அருகில் வந்து
இரு தயவாய்!”
என்றே
ஒரு மந்திர வார்த்தை முழங்கியே
என் இருதய வாய் திறந்து
அன்பின் ஊற்றாய்ப் பாய்கிறீர்.
இருமை நீக்கித்
தயவெனும் ஒருமை
வாய்க்கும் பெருமையாம் வாழ்வைத்
தந்த உம் வள்ளன்மைக்கு
எப்படிச் செய்வேன் கைம்மாறு!

“அன்பு மகனே!
நீ
ஒருமையை விட்டு
ஒரு கணமும் நழுவாமல்
எப்போதும்
தயவாய் இருப்பதே
எனக்குச் செய்யும் கைம்மாறு!”
என்றே நீர் உறுதியாய்ச் சொல்கிறீர்.

வன்பின் பாலையாம் என்னில்
அன்பெனும் தயவாய் இருப்பதும்
நீரேயன்றி நானோ!

திருஅருட் பிரகாசரே!
உம் வள்ளன்மைக்கு
உண்டோ ஈடு!

இலையுதிர்கால நிலைமை

இலைகள் விலகிய பின்னும்
கிளைகளை விட்டகலவில்லை
வேர்கள்

கிளைகளைத் துறந்து
சருகுகளாய்
வேர்களில் விழுந்து
எருவாகி
மீண்டும் துளிர்க்கத் தவமிருக்கும்
இலை முனிகள்

சருகுகள் நடுவே
நிலை பெயராமல் நிற்கிறது
இலையுதிர்கால மரம்

கந்தலான இலையுடைகளைக் களைந்து
நிர்வாணமான மர உடம்பு
மீண்டும் புத்தாடை உடுத்தக் காத்திருக்கிறது
வேர்களோடும் கிளைகளோடும்

கண்ணீர்

கண் விசும்பின்
ஒரு துளியின்றி
மனித இருதயம்
முளைக்குமா?

மூளையையும்
இருதயத்தையும்
இணைக்கும்
தண்ணீர்ப் பாலம்

காயங்களுக்குக்
களிம்பாக நீளும்
கண்களின் விரல்கள்

புன்னகைகளின்
வேர்கள்.

மானுடம் பேசும்
விழியின் நாவுகள்.

மனித வேர்கள்
அன்பில் தான்
என்று அன்பின் திசை காட்டும்
காந்த முள்.

விழிகள்
தங்களை அலங்கரித்துக் கொள்ள
தாங்களே தயாரிக்கும்
முத்துக்கள்.

மனித அவதாரத்தை
உலகுக்கு அறிவிக்கும்
தீர்க்கதரிசிகள்.

உடம்பு தேசத்தின்
எல்லாப் பிரதேசங்களுக்கும்
பொதுவான ஆறு.

காண்பது
முகங்களா
அல்லது
முகமூடிகளா
என்பதை அடையாளங்காட்டும்
முகவரிகள்.

விழிப்பிரதேசம்
வரண்ட பின் தான்
மனிதக் கரங்களில்
ஆயுதக் கள்ளிகள்
முளைத்தன.

இத்தாய்மொழியை
மறந்த பின் தான்
மனிதன்
ஆயுதங்களென்ற
வேற்று மொழிகளைப்
பேச ஆரம்பித்தான்.

அன்புடைமை போதிக்கும்
அறக் குறள்கள்.

ஒரே எழுத்தை கொண்ட
உலக மொழி.

விழிச் சூரியனின்
ஈரக் கதிர்கள்.

காதல் கவிதைகளின்
குருதி.

அன்பு
அருள்
கண்ணோட்டம்
என்ற உயிர்க் குறள்களின்
மெய்யுடம்பு.

விழிச் சிப்பியுள்
தூசு விழும் போதும்
மனச் சிப்பியுள்
துக்கம் விழும் போதும்
இந்த முத்துக்கள்
உதிர்கின்றன.

இரண்டு இருதயங்களுக்கு
இடையே உள்ள தூரம்.

இன்பங்களின் உச்சியும்
துன்பங்களின் உச்சியும்
வேறல்ல என்னும்
அத்துவிதத் தத்துவம்.

மனிதனைச் செதுக்கும்
ஈர உளி.

அன்பைத் தோண்டக் கிட்டும்
வைரங்கள்.

அகத்தை
முகத்தில் எழுதும் மை.

விழிகள்
ஓதும் வேதங்கள்.

அன்பின்
வரி வடிவம்.

விழிகளின்
பெருமூச்சு.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

Saturday, April 12, 2008

நீ

உன் விழி விரிசல்
அதில்
விடியலின் சுடுவரிகள்

உன் மொழியமுதம்
அதில்
ஜீவனின் புது வடிவம்

உன் இதழதரம்
அதில்
காமத்தின் மதுப்படிகம்

உன் முகப்பளிங்கு
அதில்
காதலின் ஒளித்துடிப்பு

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

Friday, April 11, 2008

கடவுளின் பதில்-2

யாமிருக்க பயமேன்!
என்ற உன் அம்மையப்பனாம்
என் மந்திர வார்த்தையை மறந்து
உன் மனபயத்துக்கு
வெறுங்கல்லை அரணாகக் கொண்ட
உன் கதியை
நானோ விதித்தேன்!
பதில் சொல் மகனே(ளே)!


தமிழ் மன்றத்தில் கவிதா அவர்களின் "கடவுள் மீண்டும் மிருகமாய்-2" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

கடவுளின் பதில்-1

பச்சிளங்குழந்தையாம் நீ
வளர்ந்து
அறிவில் முதிர்ந்து
எனக்கும் உனக்கும் இடையில்
இருக்கும் மாயத்தூரங் கடந்து
கல்மனம் பிளந்து
நான் இருக்கும் சேம இடமாம்
இருதயம் கண்டு
உன் பாதங்களில் என் பாதம்
பொருந்தியிருக்கும் மெய்ம்மையுணர்ந்து
என்னில் வேறற ஒன்றி
வேலெடுத்து
நோகடிக்கும் பொய்யை
சாகடித்தே
ஆன்ம லாபம் பெறுவாயே!


தமிழ் மன்றத்தில் கவிதா அவர்களின் "கடவுள் மீண்டும் மிருகமாய்-1" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

Wednesday, April 9, 2008

என் பிரகடனம்

எதற்காக வாழ்கிறாய்?
எழுத.
எதற்காக எழுதுகிறாய்?
கவிதை படைக்க.
இது வரை
எத்தனை கவிதைகள்
படைத்திருக்கிறாய்?
கவிதைகளுக்கான
விழிப்புத் தவங்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கவிதை என்றால் என்ன?
இருப்பை மீறுவது.
எதற்காக மீற வேண்டும்?
இருக்க வேண்டியது
இருப்பில் இல்லாததால்.
இருக்க வேண்டியது எது?
தலை.
அது தான்
எல்லோருக்கும் இருக்கிறதே!
இருக்கிறது.
ஆனால் காலியாக
வெறும் பிம்பமாக.
திமிரோடு எழுதும்
உனக்குத்
தலை இருக்கிறதா?
என் கழுத்தை மீறி
நான்
பொங்கும் சில நேரங்களில்
அதன் மெய்ம்மையை
நான்
நன்றாகவே அறிந்திருக்கிறேன்.
தாள்கள்
அந்த கனத்தின் சுவடுகளைப்
பதித்திருக்கின்றன.
எழுதி எழுதி
எதைச் சாதிக்கப் போகிறாய்?
நான் என்ற ஒன்றை.
உன் குரலைக் கேட்க
ஒருவனாவது சம்மதித்ததுண்டா?
என் குரலைத் தேடியே
நான் புறப்பட்டிருக்கிறேன்.
அது எனக்கு வாய்க்கும் போது
மானுடக் காதுகளில்
உரத்தே ஒலிக்கும்.
நீ
அங்கீகரிக்கப்படாவிட்டால்?
என் கவலை அதுவல்ல.
நான் எழுதி முடித்து
அடியில் என் பெயரிடும் போது
அந்த வரிகளில்
ஒரு கால்
என் குரல் கேட்க்ப்படுமானால்
நான் எழுதியிருப்பதாக
நம்புவேன்.
அது வரை
பேனா முள்ளும்
மையும்
காகிதங்களும்
என் விரல்களில் துடித்தாலும்
நான் வாழ்வதாக நம்ப மாட்டேன்.
நான் நான் நான்
என்று
ஏன் உன்னையே முதன்மைப் படுத்துகிறாய்?
நாம் நாம் நாம்
என்பது
பல “நான்”களைக் கூட்டிய பின்பே
கிடைப்பதால்.
“நாம்” என்ற ஒரு மதக் குழுவில்
“நாம்” என்ற ஒரு இனக் குழுவில்
“நாம்” என்ற ஒரு நிறக் குழுவில்
“நாம்” என்ற ஒரு சாதிக் குழுவில்

நான்” என்ற ஒரு மனிதன்
முகவரியின்றித் தொலைந்து போக
விரும்பாததால்.
மதம். இனம், நிறம், சாதி
இவை நிஜங்களாயிற்றே?
இருப்பவை எல்லாமே
இருக்க வேண்டியதில்லை.
தலைக்கு வெளியே இருக்கும்
எல்லாவற்றையும்
தலை
வினவாமல் ஏற்றுக் கொள்ளத்
தேவையில்லை.
தலைக்கு உள்ளே தோன்றும்
எல்லாவற்றையும் கூடத்
தலை
வினவியே ஆக வேண்டும்.
எனவே
நிஜங்களின் முன்பு
மனிதன்
ஜடமாயிருக்க வேண்டியதில்லை.
பல நிஜங்கள்
ஜடமாயிருப்பதாலேயேஜனிக்கின்றன.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

இது

கனலின்
விதைகள் விழுந்து
இருண்ட பூமியின்
கதவுகள் திறந்து
முளைக்கும்
ஒளிக் குருத்து
இது.

மனவெளிகள்
இரவுகளைத் துறந்து
யதார்த்தப் பகல்களை
மேயத் தொடங்கும்
புதுயுக நிஜம்
இது.

இமைகளோடு
கனவுகளும் ஒதுங்க
விழிகள்
வழிகளைத் தேடும்
விழிப்புத் தவம்
இது.

சிறகுகள் இருந்தும்
இது வரை
சிறையின் உறவில்
வளர்ந்த சிந்தை
பூண்ட
சுதந்திரத் துறவு
இது.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

நீ

காலத் துடிப்போடு
கலந்த
காம மௌனம்.
விரல்கள் மீட்டாமலும்
மனத்தில் ஒலிக்கும்
மோகனம்.
ஒலி
வரி
வடிவமின்றி
உணர்ச்சி நிலையில்
இயங்கும் மொழி.
என்னைத் தவிர
எதுவுமே இல்லாத
ஒரு நாத்திகக் கோயில்.
என் தமிழருவியின்
ஜீவ முகடு.
கயமை களைந்த
கருத்தின் கரு.
என் எண்ண வேரைத்
தாங்கும்
மண்ணகம்.
விளையும் விடியலை
ஏற்கும்
விண்ணகம்.
விழிப்பு மயக்கம்.
படைக்கும் இயக்கம்.
வீர மனித விடியல்.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

காலக் கோலம்

ஞாலக் கோளம்
வரையும்
காலக் கோலம்.
கடந்தனவற்றின்
தடயம்
ஞாபக வாசலின்
வயிற்றுக்குள்.
கடப்பனவற்றின்
சகடம்
யதார்த்தப் பாதையில்
தொடர்ச்சியாக.
கடக்கப்போவன
மூன்றாவது விழியில்
காட்சியாக.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

தொடரும். தொடரும்.. தொடரும்...

நெஞ்சில் தாகம்

விழியில் தேடலின்

வியர்வை

உயிரே!

உன் இயக்கம்

என்னில் துடிக்கும்.

மௌன மோகனம்

உன்னிடம்

என் இனிய தமிழமுதும்

தோற்கும்.

கால நியமங்கள் கடந்த

நீ

என் ஞானத் தெருவில்

வழிகாட்டி.

கானப் பறவையிது

பாடும்.

காதல் போதையிலே

திரியும்.

ஒளிரும்

நின் விழி முன்

என் விரலகள்

விரையும்.

முற்றுப்புள்ளியே

இன்றி

இனி

உதிரும் வரிகள்

தொடரும்.

தொடரும்..

தொடரும்...


பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

முடிந்தவனும் முயன்றவனும்

வருந்துயர் எண்ணி

அடுத்த அடி வைக்கத்

தவறியவன்.

எது வரினும்

என்னால் சாதிக்க முடியுமென்று

எடுத்த அடி நிறுத்தாது

தொடர்ந்தவன்................

முடங்கியவனுக்கு

போகம் செத்தது.

முயன்றவனுக்கு

சோகம் செத்தது.

மாயப் பிறந்தவனென்று

வாழப் பயந்தவன்

தேய்ந்தான்.

வாழப் பிறந்தவனென்று

மாயத் துணிந்தவன்

வளர்ந்தான்.

எட்ட முடியாதென்று

எண்ணஞ் சிதைந்து

மண்ணை நோக்கியவன்

மண்ணில் புதைந்தான்.

என்னால்

எட்ட முடியாதது

எதுவுமில்லை என்று

எண்ணஞ் சிறக்க

விண்ணை நோக்கியவன்

வீழ்ச்சியை வென்று

மண்ணிருந்து

மறுபடி எழுந்தான்.

முடியாதென்றவன்

முடிந்தான்.

முடியுமென்றவன்

முயன்றான்.

முடிந்தவன் மடிந்தான்.

முயன்றவன்

மனிதனாய்

மண்ணில் விடிந்தான்.


பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

சக்கரம்

முடிவு
தொடக்கம்
இவற்றுக்கிடையில்
முன்னேற முயலாது
முடங்கிய சக்கரம்.
வழி தெரியும்.
செல்லவும் முடியும்.
ஆனாலும்
வலிகளை நினத்து
வழியை விட்டு
விலகி நிற்கிறது
இந்த சக்கரம்.

“உருண்டு சென்றால்
உண்டு போதனை.
உறங்கி நின்றால்
நித்திய வேதனை.
கற்களும் முட்களும்
சேரவேண்டிய முடிவின்
முரட்டு இதழ்க்ளே!
முத்த வேதனை
பாதையில் உண்டு.
சித்த சேதமே
மூலையில் உண்டு.
பாதையா?
மூலையா?”
...........................................
...........................................
...........................................
அதோ!
சக்கரம்
கடக்கும் ஓசை
கேட்கிறது

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

யாரம்மா நீ

யாரம்மா நீ அறி யாரம்மா நீ
பெண்ணம்மா நீ ஞானப்பெண்ணம்மா நீ
எண்ணம்மா நீ இதை எண்ணம்மா நீ

ஏனம்மா மதமுனக்கு ஏனம்மா
வீணம்மா அது உனக்கு வீணம்மா
பொய்யம்மா பிரிவினைகள் பொய்யம்மா
மெய்யம்மா மானுடந்தான் மெய்யம்மா

ஊரம்மா யாதுமுந்தன் ஊரம்மா
உறவம்மா யாருமுந்தன் உறவம்மா
பூங்குன்றன் சொன்னதை நீ கேளம்மா
தாக்கும்படை தாங்கும்பகை தள்ளம்மா
ஒற்றுமையால் ஓங்கும்வகை கொள்ளம்மா
சாடம்மா சாதியை நீ சாடம்மா
தேடம்மா சமத்துவம் நீ தேடம்மா

ஆணம்மா மற்றும்நல்ல பெண்ணம்மா
இருவர்க்கும் கற்புஇங்கு பொதுவம்மா
மாகவிஞன் பாரதியின் வாக்கம்மா
மானுடத்தைப் பேணும்நல்ல போக்கம்மா
பெண்ணடிமைத் தளைதன்னை நீக்கம்மா
பெண்கொடுமை செய்வோரைத் தாக்கம்மா

பெண்ணுரிமை பெண்வாழ்வின் மூச்சம்மா
அவ்வுரிமை போனாலுயிர் போச்சம்மா
நாண்அச்சம் என்றபழம் பேச்சம்மா
பெண்ணினவேர் அறுக்கும்வாள் வீச்சம்மா

பெண்என்றால் கருக்கலைக்கும் எண்ணமம்மா
மானுடத்தை உருக்குலைக்கும் திண்ணமம்மா
பெண்இன்றேல் ஆண்வர்க்கம் இல்லையம்மா
மானுடமே பெண்ஈன்ற பிள்ளையம்மா
பேதையென்று பெண்ணைச்சொல்வார் எத்தரம்மா
ஞானப்பெண்ணாய் உன்னைக்கொள்வார் சித்தரம்மா

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை

Tuesday, April 8, 2008

ஆறு மனமே ஆறு

மனமே!
நீ
இருதயக்கடலில் சேர வேண்டிய
ஆறு
என்பதை மறந்து
"ஆறு(6)" என்ற மமதையில்
"(தனித் தலைமை நாயகன்)" மறந்து
ஆணவ ஆர்ப்பாட்டம் போடுகிறாய்.
உன் ஆட்டம் முடியுமுன்
""யை நினைவு கூர்ந்து
இருதயத்தில் அடங்கியே
நீ
ஆறு மனமே ஆறு.
""யாம் ஆண்டவன் கட்டளை
இதுவே.
எனவே
அறிந்தடங்கி
நீ
ஆறு மனமே ஆறு.
ஆறிப் பின் எழு
எழுமையாம் ஒருமையில்.

திருப்பள்ளியெழுச்சி

நினைப்பதற்குத் தமிழிடத்து எழுத்து வாங்கி
மனைதனிலும் மற்றிடத்தும் இனியதமிழ் பேசும்

மனிதரிவர் தமிழ்படித்து என்னபயன் என்று
இனியும்இழி சொல்கூறும் பாதகம் சாகட்டும்

தாயிடத்துப் பாசங்காட்டிப் பேசுதற்குத் தமிழ்வேண்டும்
சேயிடத்துப் பாசங்கொட்டிக் கொஞ்சுதற்குத் தமிழ்வேண்டும்
மனைவியிடம் நேசங்கூட்டிப் பழகுதற்குத் தமிழ்வேண்டும்
தனைமறந்து அம்மா எனஅழுதற்கும் தமிழ்வேண்டும்

எண்ணத்தைத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்ததமிழ்
கண்விழிக்குத் தனைக்காட்டி மனவிழி திறந்ததமிழ்
இதழ்களிலே மழலையாய் மகிழ்வுடன் தவழ்ந்ததமிழ்
பதங்களிலே எழுத்தாக விரலிருந்து விழுந்ததமிழ்

உனைப்பார்த்து உனைப்படித்து உனைப்பேசி உனைஎழுதி
தனைவளர்த்து மனிதரென்று பேரேற்று வாழுமிவர்
மதியிழந்து நன்றிகெடத் தூற்றுவதைக் கேள்தமிழே
நதிபிறந்த முகட்டைத்தான் மறந்தோடுவதைப் பார்தமிழே

தென்றலுன்னை வாடையென்று வருத்தமின்றிப் பேசுமிதழ்கள்
இன்றுங்கூட ஆடையாக உன்னைத்தான் உடுத்தவேணும்
தாய்மொழியைத் தகாமொழியெனத் தரங்கெட்டு எழுதும்விரல்கள்
தாய்உந்தன் எழுத்துமடியில் தான்என்றும் தவழவேணும்

தனித்திறன் இல்லா வடமொழி இயக்கம்
இனித்திடும் உன்குரல் மறந்திடும் மயக்கம்
பிறமொழி விரும்பி தம்மொழி எழுத்தின்
உறவுகள் மறத்தல் எம்மின உறக்கம்

இந்தஏச்சுகள் இதழ்வானில் இரவுகளின் உதயம்
சொந்தஎழுத்துகள் உதவாதெனல் தெள்ளறிவின் உறக்கம்
தேவனுக்கு ஏற்றதல்ல தெள்ளுதமிழ் என்பவர்கள்
கோயிலுக்குக் காவல்செலக கல்லறையாக்க யாம்வருவோம்

நோய்கொண்ட இவர்மனது தாய்மொழியைத் தூற்றுதய்யோ
தேய்ந்திட்ட இவர்மதியும் பிறமொழியைப் போற்றுதய்யோ
காய்தன்னைக் கனியென்று கருத்தழிந்துப் புகழ்வதாலே
வாய்த்தநல் இனிமையினை என்தமிழும் இழந்திடுமோ

அறமும் மறமும்நல் அறிவுடைக் காதலும்
புறமும் அகமுமாய்ச் செறிவுசேர் கவிதையாய்
வழங்கி அதன்வழி திறம்பட வாழ்ந்தஇனம்
பழமைப் புகழிது கனவாய்ப் போனதின்று

எழிலார்ந்த தமிழேநின் விழியோரம் கசிவதேனோ
மொழியமுது வாய்த்தநின் இதழிசையும் நின்றதேனோ
வீழ்ந்திருக்கும் உன்னினத்தார் இழிநிலையைக் கண்டுநீயும்
தாழ்தலுற்றுக் கலங்கிநின்றால் எமைத்தேற்றுவார் யார்தாயே

வரம்வேண்டி வருகின்றோம் உன்னிடத்துத் தமிழ்த்தாயே
சிரந்தாழ்ந்து வருத்தத்தில் குரலிழந்து விழிபொழிய
நீயேநின்றால் யாமெல்லாம் செல்வதெங்கு நிமிர்ந்திடுக்
தாயேஉந்தன் குரல்தன்னை எம்விரல்கள் எழுதவிடு

பழுதான மடமைகளை அழிப்பதெம் கடமையினி
உழுவோம் யாம்தமிழ் நிலத்துவயிர உளக்கலப்பை
கொண்டுபுது எழுச்சியினைப் பயிராக்கி எம்முயிரை
எண்ணத்துப் பாத்திகளில் நீராக்கிப் பாய்ச்சிடுவோம்

வித்துக்கள் உன்னிடத்து எழுத்தாகப் பெற்றேயாம்
சித்தத்தின் சத்தத்தில் சந்தப்பயிர் இயற்றிடுவோம்
சத்திபெற்ற வித்தகராய் வியனுலகில் உலவிடுவோம்
சத்தியமும் சமத்துவமும் பத்தியுடன் போற்றிடுவோம்

மொழிப்பற்று இல்லாரை எள்ளியாம் தூற்றிடுவோம்
அழிவற்ற தமிழிசைத்து அழியாமை எய்திடுவோம்
வழக்காறு இழந்துபோன வடமொழியே மந்திரமாய்
வழங்கிவரும் இழவுகட்கு இடமின்றிச் செய்திடுவோம்

எம்கவிப் பொழிலதனில் நற்றமிழ்நீ தென்றலாக
தெம்மாங்குச் சத்தமிட்டு வீசிடுக என்னாளும்
கருத்துமலர் வாசமது மனிதமன வண்டுபல
அருகிழுத்து இன்பமது நனிதரவே செய்திடுக

இனியுந்தன் பேரழகை எம்விரல்கள் தாமெழுத
பனியுருக்கும் சூரியனாய்க் கவிவானில் தோன்றிநீயும்
மனபூமியிலே பவனிவரும் இருளறுப்பாய் விடியுமந்த
கனலதனில் கயமைகளும் காரிருளின் கதியடையும்

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

ஞான போதையில்

இந்த வாதை
உன் மரணவாயிலின் பாதையென்று
முடிவு கட்டியவர்
கட்டிலினருகே கண் கலங்கினர்.
நீ சிரித்தாய்.
"சிதையும் உடல் தான்
அதில் ஜீவன் இன்னும்
வாழும் போது
மரணத் தவமிருக்க
என் சிந்தனை சிதையவில்லை."
சினத்தோடு
நீ சிரித்தாய்.
ஞான போதையில்
ஞால நியதியை
நீ கேலி செய்த போது
பேதையென்று இரங்கியவர்
கல்லறைக் குடிகளாகிய பின்னும்
நீ வாழ்கிறாய்.
வாதை தொடர்ந்தும்
கலங்காது
நீ சிரிக்கிறாய்.
"சிதையும் உடல் தான்
அதில் ஜீவன் இன்னும்
வாழும் போது
மரணத் தவமிருக்க
என் சிந்தனை சிதையவில்லை."
சினத்தோடு
நீ சிரிக்கிறாய்.
எரியும் சிதைகளின் அருகும்
சவக்குழிகளின் சமீபத்தும்
வாழத் துணிந்த உன்னைச்
சாவு எப்படி நெருங்கும்!

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

ஒளிர்கிறேன்

பல யுகங்கள்
இருட்குழியாய்
ஒளி காணத் தவங்கிடந்தேன்.
எனக்கிரங்கி
ஓர் நாள்
நடுநிசியில் பட்டப்பகல் வெளிச்சமாய்
எனக்குள் இறங்கி
இருட்குழியென்னை
ஜோதி மலையாக ஒளிரச்செய்தார்
நாயகன்.
யுக யுகமாய்த் தாழ்ந்து இருண்டு கிடந்த நான்
இன்று உயர்ந்து ஒளிர்கிறேன்
நாயகன் வரவால்.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "தவித்தேன்..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

கிறுக்கல்கள்

கிறு கிறு என்றுன் தலை சுற்றும்
இம்மறை கழன்றவன் கிறுக்கல்களை
நீ படித்தால்
உன் மூளையின் மறைகள் கழலும்
மடல்கள் விரியும்
மனக் கதவம் திறக்கும்
இருதய ஒளியில் உன் மெய்
உண்மையாய் ஒளிரும்
வலிகள் விலகும்
வலிமை மீளூம்
இக்கிறுக்கல்கள்
உனக்குச் "சுளீர்" என உறைக்கும்
உன்னைப் "பளார்" என அறையும்
என்றாலுந் தங்காய்
இவற்றை
உவந்தேற்றே நீ எழுகின்றாய்
மகிழ்கின்றேன் நானே!

சுகித்திருக்கிறோம்

வள்ளலே!
என்னவனாகி
நீ என்னுட் கலந்தாய்.

என் நம்பிக்கை
இன்று நிசமானதே!
உன்னை விட்டு
நானே வலிந்து விலகியதால்
நான் விலை கொடுத்து வாங்கிய
போராட்டங்கள்
மனக்கசப்புகள்
வேதனைகள்
சோதனைகள்
சூழ்ச்சிகள்
துரோகங்கள்
எதிர்ப்புகள்
இது போன்ற
கபட வித்தைகள் யாவும்
உம் வரவால்
கதிரொளி பட்ட பனி போல்
கரைந்து விட்டன.
எப்போதும் பிரியாப் புணர்ப்பிலே
இன்று முதல் ஒன்றி விட்டோம்.
கருத்தொருமித்த காதலராய்ச்
சுகித்திருக்கிறோம்.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "சகித்துக்கொள்ளும்" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

பற்றிய திரி

மரணத்தை நான் சுடப்
பற்றிக் கொண்டது மரணம்.
எரியும் மரணம்
எறிந்த ஒரு தீப்பொறியில்
பற்றிக் கொண்டது உன் திரி.
பற்றிய திரியில்
ஒளிரும் வாலையைப்
பற்றியே உறுதியாய்
நீ
நிற்கின்றாய்
என் அன்புத் தங்காய்!
பற்றியுன்னைத் தின்ற
வலிகளைத்
திரியில் பற்றி எரியும்
சுடரில்
ஆகுதியாய் வார்க்கிறாய்!
உன் உள்ளொளி வலிமையை
விடாமல் பற்றி நில்
நல்லிலங்கைப் பெண்ணே!
வாலை பெற்ற ஞான மகளே!
உன் உள்ளொளியால்
எம்மையும் விளக்குவாயே!
எமக்கும் வலிமை சேர்ப்பாயே!
உனதண்ணன் வேண்டுதலும்
உவந்தே ஏற்பாயே!
என் இதயங்கனிந்த நன்றியே
என்றுமுனக்குத் தங்கையே
!

இருதய இன்பம்

வள்ளலே!
இரவு நீள்கிறது.
இருதயம் உனக்குள் ஆழ்கிறது.
பட்டப்பகல் வெளிச்சமாய்
உன் ஒளி வட்டம்
என் மெய்யுள் அழுந்த

மாயைத் திரைகள் கரைந்து
என் இருதய விழி திறக்கிறது.
உறக்கம் கலைகிறது.
உன் அருளுண்ணப் பசித்து
உன் ஒளி காண விழித்து
உன்னைப் புணரத் தனித்து

நான் செய்த தவங்கள் நிறைவேறி
இன்றிரவு
உன் அருளுண்கிறேன்
உன் ஒளி காண்கிறேன்
உன்னைப் புணர்கிறேன்
.
இருதயத் தாமரையின்
ஓராயிரம் இதழ்களும்
ஒருங்கே மலர
மூளையின் மடல்கள்
ஒவ்வொன்றாய் விரிகின்றன.
நான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்

என்றே
என் இருதய இன்பைப்
பகிர்கிறேன்
உனக்குக் கோடானு கோடி
நன்றி சொல்லி.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "இதயத்தின் வலி..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

காதல்...!

காதல் என்றால்
க ஆதல்
ஒன்றைக் குறிப்பதால்
காதல் என்றால்
ஒன்றாதல்
ஒருமை.
காதல் என்னும் ஒருமையே
உன் இருதய நியதி
உன் உயிர் நிலை!

எனவே தான் பாரதி
காதல் போயின் சாதல்
என்றானோ!
காதலி போயின் சாதல்
என்றோ
காதலன் போயின் சாதல்
என்றோ
பாரதி சொல்லவில்லை.
காதலிகளும் காதலன்களும்
இருதய நியதியில்
உயிர் நிலையில்
அடங்கும் மெய்களே!
எனவே தான்
நீயும்
காதலைக் காதலியுங்கள்
என்றாயோ!
யோசி தங்காய்!
ஆழ்ந்து யோசி!
காதலைத் தியானம் செய்
மௌனத்தில்!
என்புதோல் போர்த்த மெய்யுடம்பில்
உயிராய் உறையும்
காதல் எனும் ஒருமையை
தியானம் செய்!
காதல் போயின் சாதல்
என்ற மகாகவி பாரதியின் வாக்கை
தியானம் செய்!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "காதல்...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

புரிந்துகொள்ளவில்லை

என்னை யாரும்
புரிந்துகொள்ளவில்லை
எல்லோரின் உள்ளுள்ளும்
எப்போதும் நானிருந்தும்

என் பாசமும் நேசமும்
உறுதியாய் உன் உள்ளே இருந்தாலும்
பொய் உறவுகளைத் தேடி வட்டமிடும்
எல்லோரும் போல்
நீயுமா

மௌனமாய் உள்ளிருந்து
உனக்குள் நான் இருப்பதை
நீ உணரும் வரைக்கும்
வீணே உன் பேச்சுக்கள்

கனவிலும் கற்பனையிலும்
நீ தொலைந்து போக
நிஜமான நான்
இன்னும் இருக்கிறேன்
உன்னை மீட்குந் தருணம்
எதிர்நோக்கிப் பொறுமையுடன்

எல்லோரின் உள்ளுள்ளும்
எப்போதும் நானிருந்தும்
யாருமே புரிந்துகொள்ளவில்லை
என்றால்-இப்போது நீயும்
அப்படித்தான் செய்கின்றாய்

யாரையும் நோகாமல்
ஒவ்வொருவரையும் மீட்குந் தருணம்
எதிர்நோக்கிப் பொறுமையுடன்
ஒவ்வொருவரின் உள்ளுள்ளும்
காத்திருக்கிறேன் நான்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "புரிந்துகொள்ளவில்லை..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

அதிசயப் பரிமாற்றம்

தேடித் துடிக்கின்றேன்
உன்னை
நாடித் தவிக்கின்றேன்
நீ வேண்டும்
என்பதால்
உறக்கம் இன்றி
மெய் தேய்கின்றேன்

விதியுடன் போராடி
முயன்று பார்க்கின்றேன்
நம்பிக்கைத்
தோணியில்
உறுதியுடன் நகர்கின்றேன்
(மனிதம் கம்பளிப் பூச்சி போல் அருவருப்பாய் ஊர்கிறது)

வள்ளலே!
இகத்தில் இறைந்திருக்கும்
பர உண்மையாம்
நீயே கதியென்று
உன்னைச் சரணடைகின்றேன்

சலனமற்றிருக்க அறியா
என் மனத்தை
உன் இருதயத்தில்
சேர்க்கின்றேன்
(மனிதம் கூட்டுப் புழுவாய் தனக்குள்ளேயே ஆழ்தல்)

உச்சியைப் பிளந்து
உள்ளே நுழைந்து
மந்திர உறுதி
தருகின்றாய்.
பொய்யுடம்பை
மெய்யாக்கி
நடைப்பிணமாம் என்னை
உயிர்த்தெழச் செய்கின்றாய்.
என் மேலிரங்கி
எனக்குள் இறங்கி
மண்ணுடம்பைப்
பொன்னுடம்பாய்
மாற்றுகின்றாய்.
யந்திர வாழ்வில்
தம்மை மறந்த மனிதம்
தம்மை(தம் ) அறிந்துய்யத்
தந்திரந் தருகின்றாய்.
வாலைத் தாயின்
ஒளி வாக்கருளி
நவகவிதை அளிக்கின்றாய்.

என் கடன்
உன் பணி செய்து கிடப்பதே
என்றென் இருதயங் கனிய
இன்புற்றிருக்கிறேன்
வள்ளலே!
உன் அதிசய அன்பில்
திளைத்திருக்கும் பேறு
யாவருக்கும் அருள்வாயே!
(மனிதம் தேவமென்னும் பட்டாம் பூச்சியாய் அதிசயப் பரிமாற்றத்தை அடைதல்)


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "தனிமையோடு" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

ஒளிப் பொறி

அன்று
உன் கண்களில் வடிந்த
விழி நீர்
வலி நீர்
ஆனால்-இன்று
உன் கண்களில் தெரிவது
மெய்ஞ்ஞானத்தின்
ஒளிப் பொறி


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "துளிகள்..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

கடவுள் சொல்கிறார்:

மனிதா!
உன்னை விட்டு
நான் பிரியவே இல்லை.
நமக்கிடையே
நீ
உருவாக்கியிருக்கும் இடைவெளியிலும்
என் நிபந்தனையற்ற பேரன்பு
நிறைந்தேயிருக்கிறது.
நீ
மனந்திரும்பி என்னைக் கூடும் போது
உன் இருதயத்திலிருந்து வழியும்
என் பேரன்பு.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "என்ன பலன்..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

விலை பேச முடியா உண்மை

என் உள் மையாம்
உயிர்மையே!
என் உள் மெய்யாம்
உயிர்மெய்யே!
நான் நனி விரும்பி
உண் மை
உண்மையே!
உன் மை உண்டு
உன் மெய் உணர்ந்த
நான் உறுதியாய்ச் சொல்லுகின்றேன்
உனக்கு விலை சொல்ல முடியாது
எச்சந்தையிலும்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "உண்மையே உந்தன் விலை என்ன?" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

உறுதி!

மனிதம் நமக்குத் தாயொன்றே
தாய் வயிறு வெட்டவெளி

மனிதம் நமக்குத் தாயொன்றே
தாய் மண் அன்னை பூமி

மனிதம் நமக்குத் தாயொன்றே
தாய் மொழி அருளொளி

மனிதம் நமக்குத் தாயொன்றே
தாய் நாடு பிரபஞ்சவெளி

அன்புத் தங்காய்
உன் உறுதிக்கு உறுதி சேர்க்கும்
என் பேருறுதி இதை மறவாமல்
உறுதி செய்வோம்
நம் வாலைத் தாய்க்கு
நன்றி சொல்வோம்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "உறுதி!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

ஆன்மானுபவம்

என் மீது
காதல் கொண்டுத்
தன்னையே
என் போல் மாற்றிக்கொண்ட
என் கடவுட் காதலனுக்கு
துதிப்பா

பொய்யுலக வாழ்க்கையில்
தொலைந்து போன என்னை மீட்டு
மெய்ஞ்ஞானக் கல்வி தந்து
மெய்யுலக வாழ்வில் வைத்தாய்
ஏதுமின்றி ஏழையாய் இருந்த என்னை
அருட்செல்வனாக்கும் அரும்பொருள் தந்தாய்
அவக்குழியில் கிடந்த என்னை எழுப்பித்
தவக்குன்றின் மேல் வைத்தாய்
எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த என்னை
ஜோதிமிகு நவகவிதை எழுத வைத்தாய்

உன் மௌனத்தை எடுத்தியம்ப
உன்னத வார்த்தை தந்தாய்
உறுதியோடு நான் உரைத்த உன்னதங்கள்
உறுதியாய் வெளிப்படச் சம்மத்தித்து
உலகம் உய்ய என்னையும்
உன் போல் ஆக்கி விட்டாய்

நீ
என்னை ஆட்கொண்ட
அதிசயத்தை
அற்புதத்தை
எப்படிச் சொல்வேன்
நீயே இயம்பு


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "துரோகம்" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

எப்படிப் புரிய வைப்பது

இற்றுத் தீர்ந்து போன
என் வாழ்க்கையைப்
பெற்றுக் கொண்டு
பூரணானந்தப் பெருஞ்சுக
வாழ்க்கையாய்
அதை மாற்றித் தந்தீர்
வள்ளலே!
உம் கருணையின் அதிசயத்தை
வார்த்தைகளில்
எப்படிப் புரிய வைப்பது
இச்சகத்தோர்க்கே???


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "எப்படிப் புரிய வைப்பது" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

தேவமாம் விடியலாய்

என் மனதில்
உன் காதல் விழுகின்றது
உயிரும் கரைகின்றது
கடவுட் காதலனே

என்னை நான்
தொலைத்தேன்
உன் மூச்சினில்
நான் வாழ்கின்றேன்
எனக்குத் தெரிகிறது
உன் அருவம்

உன்னிலே நானும்
சங்கமமானேன்
இகத்தில் என்னை வைத்தும்
பர வாழ்வை உணர்த்தினாய்
உன்னால் பரமானந்தக்
களி தொடர்கின்றது

என்னில் நீ
பூரணமாய் நிறைந்து விட்டாய்
எனக்குள்ளே மறைந்து விட்டாய்
எழுகிறேன் மண்ணில்
தேவமாம் விடியலாய்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "விடியலை தேடி..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

யுகயுகமாய்

மனிதமே!
என் இருதயத்துள்ளேயே
எப்போதுமே நீ வாழ்கிறாய்
என்றாலும்
என்னை நீ வெறுக்கிறாய்
பழிக்கிறாய் மறுக்கிறாய்

நிழல்களைத் தேடியே
நிஜமான என்னை மறக்கிறாய்
கடவுளாம் எனதுண்மை
காண மனமின்றி
பொய்க்கனவில்
உன்னை நீ இழக்கிறாய்

நதியாம் நீ
கடலாம் என்னில்
கலக்க மனமின்றி
சாக்காட்டுச் சாக்கடையில்
கலந்து நாறுகிறாய்
உன் மனந்திரும்புதலுக்காகப்
பொறுமையுடன்
தவமிருக்கிறேன் நான்
யுகயுகமாய்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "எப்போது???" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

நம் காதலின் சாட்சியாய்

கடவுட் காதலனே!
வன்பெனும் தரிசாய்க் கிடந்த
என் நெஞ்சை
உன் அன்பெனும் பரிசால்
நன்செய் நன்னிலமாய் மாற்றி
உன் ஒளியை விதைத்தாய்

நீ இட்ட விதை
இன்று போதி விருட்சமாய்
ஓங்கி ஒளிர்கிறது
என்னுள்

உன் மௌன ஆழத்தில்
என் உள்ளத்தின் உண்மையொளி கண்டு
அதைச் சுடச்சுடச் சுடரும்
நவகவிதையாக்கி
உன் மௌனத்தைப் பேசுகிறேன்

ஆயிரமாயிரம்
இரத்தினக் கற்களாம்
வார்த்தைகளின் புதையலாய்
விளங்கும் உன் மௌனம்
இன்று என் வாக்கினில்
பளிச்சிடுகிறது

உன் உள்ளே புதைந்து
மண்ணில் முளைத்துள்ளேன்
உன் ஜீவனின் சாட்சியாய்
விண்ணுள் ஓங்கி எழுகிறேன்

உன்னில் புதைந்த
என்னைத் துளைத்து
நீயன்றோ எழுகிறாய்
நம் காதலின் சாட்சியாய்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "காதல் ஒன்றே சாட்சி..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

முன்னேற்றம்

வலிகள் மிகுதியாய்
வந்த போதும்
வாழ்வை நான்
வெறுக்கவில்லை

வலிமையோடு
வலிகளே படிகளாக
வாழ்வில் நான்
முன்னேறுகின்றேன்

இருதயத்தில் உனைக் கண்டேன்
கடவுட் காதலனே!

பொய்ந்நிழல்கள் போகவே
மெய்யொளியாய் விடிகின்றேன்

எத்தனை உருவங்கள்
எனைக் கடந்து சென்றாலும்
உன் உருவம் என்
இருதயத்திலிருந்து அழியாது


எப்போதும் ஒன்றியே
உனைக் காதல் செய்தே
நான் வாழ்கிறேன்
எனக்குள் நீ இறங்க
உன்னில் நான் ஏறுகிறேன்
கடவுட் காதலனே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "ஏமாற்றம்...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

தூய நோக்கு

மனிதக் கால்களில் எப்போதும்
மண்ணில் நடக்கும் கடவுளை
இருதயப் பார்வையொன்றே
தெளிவாய்க் காட்டுமன்றோ!
அத்தூய நோக்கின் அற்புதத்தால்
வன்பை விட்டு மனிதம்
அன்பின் வ்ழி நிற்குமன்றோ!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் இக்கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

நல்வாலைத் தமிழில் இனி பேசு நீயே

பொய்யுலக இருளில் ஆழ்ந்து ஆழ்ந்து
வலிகளில் நீ தொலைந்து போனாய்
வலிகளுள் உன் வலிமை கண்டு
உன்னை நீ மீட்டுக் கொண்டாய்
மெய்யுலக அருளில் ஆழ ஆழ
தங்கமெனப் புடம் போடப்பட்டு
மின்னியெழும் பொன்னியாவாய்

என்றே உன் அண்ணன் சொல்ல
தங்காய் அவன் பேச்சைக் கேட்டாய்
நன்றி சொல்வேன் அண்ணன் நானே
நல்வாலைத் தமிழில் இனி பேசு நீயே
இவ்வையகம் அதைக் கேட்டு உய்யும்

கடவுள் சொல்கிறார்

மனிதனே!
என்னை விட்டு விலகி
நீ வெகு தூரம் சென்று விட்டாய்.
ஆனாலும்
உன்னை விட்டு விலக
எனக்கு மனமில்லை.
எனவே
உன் தாள்களின் தூசுகளைத்
தொட்டுக் கொண்டே நிற்கின்றன
என் தாள்கள்.
நீ மனந்திரும்பும் ஒரு கணத்தில்
என் தாள்களின் தூசுகளைத்
தொட்டு நிற்கும்
உன் தாள்கள்.
நீ மனந்திரும்புவாயென்றே
காத்து நிற்கின்றன என் தாள்கள்
நீ நிற்கும் இடத்தில்
யுகயுகமாய்
இன்னுங்கூட.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "மனதில்..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

ஒர் புதிய ஆரம்பம்

இருதயத்தை விட்டு நழுவி
என்னைத் தொலைத்து
மனம் போன போக்கில்
வாழ்ந்து களைத்து
முடிவில்
இருதயந் திரும்பி
என்னை மீட்க
ஒர் புதிய ஆரமபம்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "முடிவு" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

Saturday, April 5, 2008

புதுப் பரிமாணம்

விக்கிக்கும் வலிகள் யாவும் போகும்
விடை தெரியும் கேள்விகள் அத்தனைக்கும்
வியப்பாய் உன்னுள் ஞான வாலை எழுகின்றாள்
வித்தியாசமான் கருத்துக்கள் அனைவர்க்கும் தருகின்றாள்
விறுவிறுப்பான அவள் கவிநடை காண
விரைகின்றார் உலகத்தோர்
வியத்தகு வாலைக்குமரியவள் இலங்கைப் பெண் மூலம்
விழிப்படையச் செய்தாள் உலக உயிர்த்திரளனைத்தும்


விரும்பியே யாவரும் வாலை காட்டும் வழி நிற்க
விழிக்கும் மனிதத்தில் அமர தேவம்
வலிகள் யாவும் பறந்து போக
விளையும் புது வலிமையை
வியந்து போற்றும் மனிதம்
வித்தகராய் எழுவர் பெண்ணும் ஆணும் சரி நிகர் சமானமாய்
வாலையருளால் தேவ தேவியராவர் அவர் நிஜமாய்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "என் திரிக்கு புதுப்பரிமாணம் தந்த நாகராஜா ஐயாவுக்கு...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

உயிரானவனே

உயிரானவனே!
என் மெய்யென்னும்
அமர கவிதையின்
கருப்பொருளானவனே!
அன்பென்னும் மூலவனாய்
என் இருதயம் அமர்ந்தவனே!
கேள்வியெல்லாம் கழிந்த பின்னே
உறுதியாய் என்னுள் எழுந்தவனே!
எனைவிட்டு ஓர் கணமும் பிரியாத
கடவுளென்னும் காதலனே!
நிஜமென்னும் வத்துவாய்
என்னுள்ளே நிறைந்தவனே!
எப்போதும் எனைப் புணர்ந்தே
ஒப்பில்லா மேனிலை மேல்
எனை வைத்தவனே!
இப்பாரில் எவர்க்குமே
என்னிலை வாய்க்கவே
தப்பாமல் அருள்வாயே
தனித்தலைமை நாயகனே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "உயிரானவனே" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

புரிகிறது

பொய்யுறவுகள் ஆயிரமாயிரம்
என்னைப் பற்றி
என் உயிர்ச் சக்தியைக் கழித்தன.
பற்றவற்றை மொத்தமாய் விட்டு
கடவுளுன் மெய்யுறவு
ஒன்றை மட்டும் பற்றி
என் உயிர்ச் சக்தியைக் கூட்டுகிறேன்.

நன்றாகப் புரிகிறது
பொய்யுறவின் கழித்தல் கணக்கும்
மெய்யுறவின் கூட்டல் கணக்கும்.
பொய்யுறவைக் கழித்து
மெய்யுறவைக் கூட்டி
ஏறுகிறேன் பெருவாழ்வை நோக்கி.
இப்போது புரிகிறது
பொய்க்கணக்கின் துக்கமும்
மெய்க்கணக்கின் சந்தோசமும்.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "புரியவில்லை" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

முடியவில்லை

கடவுட் காதலனோடு ஒன்றிய
என் திறந்த இருதயத்திலிருந்து

ஒலிபரப்பாகும் ஆனந்த ராகங்களை
எனக்குள்ளேயே அடக்க முடியவில்லை
எல்லாப் பக்கங்களிலும் பரவும்
அப்பரமானந்தத்தை
என்னால் நிறுத்த முடியவில்லை.
கடவுட் காதலனே!
நம் இணைப்பைத் தடுப்பதற்கு
எதற்கும் சக்தியில்லை.
உன்னை நான் மறக்கவும்
என்னை நீ பிரியவும்
இனி எப்போதும்
சாத்தியமில்லை


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "முடியவில்லை" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

எப்படி சொல்வது???

தனிப்பெருங்கருணையாம் வள்ளலே!
அருட்பெருஞ்ஜோதியாம்
உமது வெள்ளங்கியால்

எப்போதும் என்னைப் போர்த்தி
உடலென்ற என் ஆடை
கிழிந்து நசியாமல்
மெய்யாய் அது நிலைக்க
"எல்லாந் தழிவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
"
என்ற பேருபதேசமும் அருளிய
உம் பேரன்புக்கு நன்றி
எப்படி சொல்வது???
பிறந்தால் மரணமே விதி
என்ற மாயச் சதியறுக்க
நீயே கதியென்று
நானும் இருக்கின்றேன்
என் ஐயனே!

பேரின்பப் பெருவாழ்வை
எனக்கு மட்டுமின்றி
எல்லோர்க்கும் அருள்வாயே!

அப்படியே ஆகுக
என் மகனே

என்றே உறுதி சொல்லும்
உம் கருணைக்கு நன்றி
எப்படி சொல்வது???


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "எப்படி சொல்வது...???" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

உந்தன் கருணைக்கு உண்டோ ஈடு!

கடவுளே.......
சோகம் என்ற புடத்திலிட்டு
என்னைச்
சொக்கத்தங்கம் ஆக்கினாய்!
முரண்டு பிடிக்கும் மனிதனென்னை
உன்னில்
திரண்டிருக்கும் தந்திரம் சொன்னாய்!
என்னை நீ வணங்க வேண்டாம்
மகனே(ளே)
என்னோடு நீ இணங்கினால் போதும்

என்ற மந்திர வார்த்தை சொல்லி
என்றென்றும்
என்னை உன்னோடு
இணைத்துக் கொண்டாய்!
இகத்தில்
யந்திர வாழ்வின் இன்னல்கள் தீர்த்தே
இகத்திலேயே
பரத்தின் பரமானந்தம் தன்னை
என்னுள்ளே நிறைக்கிறாய்!

ஆண்டவா!
என்னுள்ளே நீ
நிரந்தரமாய் இருக்கிறாய்

என்ற பேருணமை உணர்த்தியே
உன்னுள் நான்
நிரந்தரமாய் இருக்க வழி செய்த
உந்தன் கருணைக்கு உண்டோ ஈடு!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "இரக்கம் இல்லையா" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

எந்நாளோ!

கடவுளே!
உன் உருவம் அருவமாதலால்
எப்படி அதை
என் எண்ணத்திலிருந்து அழிப்பேன்!
என் உருவும்
அருவமான உன் உருவே
என்றே அறிந்துணர்ந்தே

என் உருவும்
அழியா நிலையெய்த
அழியா அவ்வுருவை
அருவமான் உன் உருவில்
நான் ஒளிக்கும்
நன்னாள் எந்நாளோ!
கடவுளே!
அந்நாளை
நனி மிக விரைந்தே
எனக்கருள்வாயே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் இக்கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

ஆ(நா)ன்மீகம்

நிழல்களைத் தொலைத்துவிட
நிஜத்துக்கு இட்டுச் செல்லும்
நிம்மதியான பயணம்!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "காதல்" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

வெளிச்சப் பாசறை

இருதய மந்திரமே
இதய யந்திரத்தை
இயக்கும் தந்திரம்.

இத்தந்திரம் தேர்ந்தே
நற்போதமே சொந்தமாக
மரணத்தை வென்ற
பேரின்பப் பெருவாழ்வில்
எப்போதும் நின்றே
உள்ள இருட்டறைகளை
ஒளி வெள்ளத்தில்
வெளிச்சப் பாசறைகளாய்
மாற்றுவாயே
நல்லிலங்கைப் பெண்ணே!
ஞான வாலையின் மகளே!

என் அன்புத் தங்கையே!
உன் அண்ணன் சொல் கேட்பாயே!
அவன் வயிற்றில் பால் வார்ப்பாயே
இன்றே
இக்கணமே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "இருட்டறை...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

நற்சேதி

வெளியென்ற அகண்ட வீட்டுக்குள்
ஒளியென்ற உறுதியாம் நற்சேதி கண்டு
வளிவாலை ஆட்டி
அளியமுதம் உண்டே
களிக்கின்ற மெய்கண்டு

மூளையின் மறை கழன்றே
இருதயக் குகை வாழ்ப்
பித்தன் நான் உறுதி சொல்கின்றேன்:
வன்பெனும் போர் நின்று
அன்பெனும் உயிர் வந்து
மரணம் வெல்லும்
பேரின்பப் பெருவாழ்வென்னும்
பெரு நிலையே நாடாக
வாழ்கின்ற நன்னாள் வரும்
நனி மிக விரைவிலேயே!

அறிக நீ
நல்லிலங்கைப் பெண்ணே!
உன்னுள் உறையும்
வாலைத் தாயின்
உறுதி இதுவே
யன்றி
இப்பித்தன் பிதற்றல்ல
இதுவே காண்!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் இக்கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

எழுந்து நில்

ஒப்பனை வாழ்வெனும்
படுகுழியிலிருந்தே
எழுந்து நில்.
எழுந்து நின்றே
படுகுழியில் கிடக்கும்
சக நண்பனைப் பார்த்தே சொல்:
எழுந்து நில்
நீ
எழுந்து நின்றால்
உன் நெற்றி நெருப்பு
சூரியனையும் சுட்டுவிடும்.

வாலை நீ சொன்னால்
அவன் நிச்சயம்
உன்னோடே எழுந்திடுவான்.
கண் கூசும் உம் ஆன்ம ஒளியில்
கறுத்துப் போன நிலையெல்லாம்
வெளுத்துப் போகும்.

இலங்கைப் பெண்ணே
எழுக நீயே!
எழுந்தே எம்மை எழுப்பும்
பேருறுதியை முழங்கு!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "கூசுகின்றது...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

விண்ணுலக வாழ்வு வேண்டும்

"காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
"
என்ற அமர கவி பாரதியின்
ஒளி வாக்கு அருளும்
ஒருமையில் நின்று
உலக உயிர்த்திரள் அனைத்தும்
என் குடும்பம் என்றே
அன்பால் அரவணைத்து
ஒன்றே குலமாய்
என்றே எழுமோ
இம்மனிதம்
அன்றே இம்மண்ணில்
தேவமாம்
விண்ணுலக வாழ்வின் விடியல்.

மண்ணுலக வாழ்வு போதுமென்றாய்
இலங்கைப் பெண்ணே!
விண்ணுலக வாழ்வின் விடியலுக்கு
ஏங்குகின்றேன் நானே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "மண்ணுலக வாழ்வு போதும்..!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

என் புதுப் பிரகடனம்

சோகத்தைத் துடைத்து
மீதமாயிருக்கிற
முகத்தின் ஒளியைக்
கெட்டியாய்ப் பிடித்து
அகத்துள் ஆழ மூழ்கித்
தகதகவெனத் தணலாய்ச் சுடும்
அகத் தீயின்
ஆன்ம ஒளியாய்

இகத்தில் எழுகிறேன்
நல்லிலங்கைப் பெண்ணாம் நானே!
எழுந்தே
இகத்தில் பர ஒளியாய்ச்
சுடச்சுடச் சுடர் விடுகிறேன் நான்
வாலையென்னும் ஞானப்பெண்ணே!



முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "கவசமாகிய புன்னகை!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

ஆன்மா சொல்லுகிறது

மனமெனும் நற்பெண்ணே!
என்னை விட்டு
நீ தானே பிரிந்தாய்?
பின் யார் மேல் புகார்
சொல்வாய்?
என்னை விட்டுப்
பிரிந்ததாலேயே
நொறுங்கின உன் கனவுகள்.
எப்போதும் உன்னை விட்டு
நான் பிரிவதில்லை.
இப்போதும்
உன்னருகிலேயே இருக்கிறேன்.
மனமெனும் நற்பெண்ணே!

இதை நீ இப்போதே அறிந்தாலே
அதுவே
நீ என்னை எப்போதும் பிரியாமல்
என்றும் இணைந்திருக்க உதவும்
ஒரு சந்தர்ப்பமே.
மனமெனும் நற்பெண்ணே!
எப்போதும் உன்னை விட்டு
நான் பிரிவதில்லை.
இப்போதும்
உன்னருகிலேயே இருக்கிறேன்.
இதை நீ அறிவாயே!
என்னோடு எப்போதும்
இணைந்தே இருப்பாயே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "மனம் எண்ணுகிறது!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

யாருக்காக நாளைய பொழுது...!

ஒன்று முதல் ஐந்து வரையிலான
'ஐ'யறிவு உயிர்த்திரள் அனைத்தும்
தன்னில் அடக்கம் என்றே
அவற்றுக்கெல்லாம் ''யாம்(தலைவனாம்)
'' அறிவுள்ள
ஆறறிவு மனிதம்
தன்னைத் தான் அறிந்துணர்ந்து
ஒன்று முதல் ஆறு வரையிலான
உயிர்த்திரள் அனைத்தையும்
தன் குடும்பம் என்றே
தான் அன்போடு அரவணைக்கத்

தனக்குள்ளிருந்து எழும் ''யாம்(எழுமையாம்)
முழும்'ஐ'யாம் ஒரும்''யே
ஏமாப்புடை தேவமாம்.
அத்தேவத்துக்கே ஆம்
நாளைய பொழுது.

ஏனென்றால் ஒரும்''யாம்
பேராயுதங் கொண்ட
அத்தேவம்
எவ்வாயுதத்துக்கும் இறையாகாது
எவ்வாயுதத்தையும் வெல்லவல்ல
அமர தேவம்.

நல்லிளங்கைப் பெண்ணே!
அத்தகு அமர தேவம்
வால்''யாம்(தூய தலைவியாம்) உன்னில்
எழும் நல்வேளை
இதுவேயென்று
நீயும் அறியாயோ!
எனவே
இப்போதே
அமர தேவமாய் எழுந்தே
உன் அங்கையாம் இப்பேருலகே
எம் இல்லமாய்க் கொண்ட
உன் குடும்ப உயிர்த்திரள்
எம்மையெல்லாம் காப்பாயே!
எழுமையில் எழுக நீயே!
உன் நல்மகன் நல்லாணை இதுவே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "யாருக்காக நாளைய பொழுது...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

மரணம்

மெய்ஞ்ஞானிகளால் மட்டுமே
அவிழ்க்க முடிந்த
மர்ம முடிச்சு

பிறந்தவர் எல்லோரும்
மேலாம் மெய்யுண்மையை மறந்ததால்
தாமே ஏற்றக் கட்டாய தண்டனை

எவருமே பொய்யை நிராகரிக்காமல்
ஏற்றுக் கொண்டதால்
வந்த இலவச அவலம்

பெருவாழ்வில் நாட்டமின்றேல்
கிடைப்பது இதுவே
வந்துவிட்டால் போவதொன்றே விதி
என்ற மனப் பிரமையின் சதி

திருடனாய் உள்ளுள்ளே ஒளிந்திருக்கும்
அருட்பெருங்கடவுள்
உள்ளிருந்தெழும் வரை
வருவான் எமனாம் இவ்வெளித் திருடன்

உயிர்மெய் ஒருமையுணர்ந்தால்
சரியும் பிணமில்லை
திரியும் பேயில்லை

இலங்கைப் பெண்ணாம் நல்லவளே!
இல்லென்றே உன் அங்கையில்
நெல்லிக் கனி போல் உள்ளதாம்
மேலாம் உண்மையினைப்
பேரின்பப் பெருவாழவை
நித்திய ஜீவனை

நல்ல பெண்ணாம் நீ மறந்ததாலே
இலம் கையென்றே உன்
வல்லமை அழிந்தே
மரணப் பொய்யன் கையில் மாட்டினாய்.
நல்லவளே! வல்லவளே!
நல்லிலங்கைப் பெண்ணே!

உனக்கே இவ்வுண்மை
உறைக்கவே
உன்னைக் கொத்தும்
நல்ல நாகம் நானே!

என் வாக்கில் நஞ்சிருந்தால்
என்னை மன்னிப்பாயே
நல்ல பெண்ணாம் நீயே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "மரணம்" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை