Wednesday, April 9, 2008

என் பிரகடனம்

எதற்காக வாழ்கிறாய்?
எழுத.
எதற்காக எழுதுகிறாய்?
கவிதை படைக்க.
இது வரை
எத்தனை கவிதைகள்
படைத்திருக்கிறாய்?
கவிதைகளுக்கான
விழிப்புத் தவங்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கவிதை என்றால் என்ன?
இருப்பை மீறுவது.
எதற்காக மீற வேண்டும்?
இருக்க வேண்டியது
இருப்பில் இல்லாததால்.
இருக்க வேண்டியது எது?
தலை.
அது தான்
எல்லோருக்கும் இருக்கிறதே!
இருக்கிறது.
ஆனால் காலியாக
வெறும் பிம்பமாக.
திமிரோடு எழுதும்
உனக்குத்
தலை இருக்கிறதா?
என் கழுத்தை மீறி
நான்
பொங்கும் சில நேரங்களில்
அதன் மெய்ம்மையை
நான்
நன்றாகவே அறிந்திருக்கிறேன்.
தாள்கள்
அந்த கனத்தின் சுவடுகளைப்
பதித்திருக்கின்றன.
எழுதி எழுதி
எதைச் சாதிக்கப் போகிறாய்?
நான் என்ற ஒன்றை.
உன் குரலைக் கேட்க
ஒருவனாவது சம்மதித்ததுண்டா?
என் குரலைத் தேடியே
நான் புறப்பட்டிருக்கிறேன்.
அது எனக்கு வாய்க்கும் போது
மானுடக் காதுகளில்
உரத்தே ஒலிக்கும்.
நீ
அங்கீகரிக்கப்படாவிட்டால்?
என் கவலை அதுவல்ல.
நான் எழுதி முடித்து
அடியில் என் பெயரிடும் போது
அந்த வரிகளில்
ஒரு கால்
என் குரல் கேட்க்ப்படுமானால்
நான் எழுதியிருப்பதாக
நம்புவேன்.
அது வரை
பேனா முள்ளும்
மையும்
காகிதங்களும்
என் விரல்களில் துடித்தாலும்
நான் வாழ்வதாக நம்ப மாட்டேன்.
நான் நான் நான்
என்று
ஏன் உன்னையே முதன்மைப் படுத்துகிறாய்?
நாம் நாம் நாம்
என்பது
பல “நான்”களைக் கூட்டிய பின்பே
கிடைப்பதால்.
“நாம்” என்ற ஒரு மதக் குழுவில்
“நாம்” என்ற ஒரு இனக் குழுவில்
“நாம்” என்ற ஒரு நிறக் குழுவில்
“நாம்” என்ற ஒரு சாதிக் குழுவில்

நான்” என்ற ஒரு மனிதன்
முகவரியின்றித் தொலைந்து போக
விரும்பாததால்.
மதம். இனம், நிறம், சாதி
இவை நிஜங்களாயிற்றே?
இருப்பவை எல்லாமே
இருக்க வேண்டியதில்லை.
தலைக்கு வெளியே இருக்கும்
எல்லாவற்றையும்
தலை
வினவாமல் ஏற்றுக் கொள்ளத்
தேவையில்லை.
தலைக்கு உள்ளே தோன்றும்
எல்லாவற்றையும் கூடத்
தலை
வினவியே ஆக வேண்டும்.
எனவே
நிஜங்களின் முன்பு
மனிதன்
ஜடமாயிருக்க வேண்டியதில்லை.
பல நிஜங்கள்
ஜடமாயிருப்பதாலேயேஜனிக்கின்றன.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

No comments: