ஒன்று முதல் ஐந்து வரையிலான
'ஐ'யறிவு உயிர்த்திரள் அனைத்தும்
தன்னில் அடக்கம் என்றே
அவற்றுக்கெல்லாம் 'ஐ'யாம்(தலைவனாம்)
'ஐ' அறிவுள்ள
ஆறறிவு மனிதம்
தன்னைத் தான் அறிந்துணர்ந்து
ஒன்று முதல் ஆறு வரையிலான
உயிர்த்திரள் அனைத்தையும்
தன் குடும்பம் என்றே
தான் அன்போடு அரவணைக்கத்
தனக்குள்ளிருந்து எழும் 'ஐ'யாம்(எழுமையாம்)
முழும்'ஐ'யாம் ஒரும்'ஐ'யே
ஏமாப்புடை தேவமாம்.
அத்தேவத்துக்கே ஆம்
நாளைய பொழுது.
ஏனென்றால் ஒரும்'ஐ'யாம்
பேராயுதங் கொண்ட
அத்தேவம்
எவ்வாயுதத்துக்கும் இறையாகாது
எவ்வாயுதத்தையும் வெல்லவல்ல
அமர தேவம்.
நல்லிளங்கைப் பெண்ணே!
அத்தகு அமர தேவம்
வால்'ஐ'யாம்(தூய தலைவியாம்) உன்னில்
எழும் நல்வேளை
இதுவேயென்று
நீயும் அறியாயோ!
எனவே
இப்போதே
அமர தேவமாய் எழுந்தே
உன் அங்கையாம் இப்பேருலகே
எம் இல்லமாய்க் கொண்ட
உன் குடும்ப உயிர்த்திரள்
எம்மையெல்லாம் காப்பாயே!
எழுமையில் எழுக நீயே!
உன் நல்மகன் நல்லாணை இதுவே!
முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "யாருக்காக நாளைய பொழுது...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை
No comments:
Post a Comment