Tuesday, April 8, 2008

திருப்பள்ளியெழுச்சி

நினைப்பதற்குத் தமிழிடத்து எழுத்து வாங்கி
மனைதனிலும் மற்றிடத்தும் இனியதமிழ் பேசும்

மனிதரிவர் தமிழ்படித்து என்னபயன் என்று
இனியும்இழி சொல்கூறும் பாதகம் சாகட்டும்

தாயிடத்துப் பாசங்காட்டிப் பேசுதற்குத் தமிழ்வேண்டும்
சேயிடத்துப் பாசங்கொட்டிக் கொஞ்சுதற்குத் தமிழ்வேண்டும்
மனைவியிடம் நேசங்கூட்டிப் பழகுதற்குத் தமிழ்வேண்டும்
தனைமறந்து அம்மா எனஅழுதற்கும் தமிழ்வேண்டும்

எண்ணத்தைத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்ததமிழ்
கண்விழிக்குத் தனைக்காட்டி மனவிழி திறந்ததமிழ்
இதழ்களிலே மழலையாய் மகிழ்வுடன் தவழ்ந்ததமிழ்
பதங்களிலே எழுத்தாக விரலிருந்து விழுந்ததமிழ்

உனைப்பார்த்து உனைப்படித்து உனைப்பேசி உனைஎழுதி
தனைவளர்த்து மனிதரென்று பேரேற்று வாழுமிவர்
மதியிழந்து நன்றிகெடத் தூற்றுவதைக் கேள்தமிழே
நதிபிறந்த முகட்டைத்தான் மறந்தோடுவதைப் பார்தமிழே

தென்றலுன்னை வாடையென்று வருத்தமின்றிப் பேசுமிதழ்கள்
இன்றுங்கூட ஆடையாக உன்னைத்தான் உடுத்தவேணும்
தாய்மொழியைத் தகாமொழியெனத் தரங்கெட்டு எழுதும்விரல்கள்
தாய்உந்தன் எழுத்துமடியில் தான்என்றும் தவழவேணும்

தனித்திறன் இல்லா வடமொழி இயக்கம்
இனித்திடும் உன்குரல் மறந்திடும் மயக்கம்
பிறமொழி விரும்பி தம்மொழி எழுத்தின்
உறவுகள் மறத்தல் எம்மின உறக்கம்

இந்தஏச்சுகள் இதழ்வானில் இரவுகளின் உதயம்
சொந்தஎழுத்துகள் உதவாதெனல் தெள்ளறிவின் உறக்கம்
தேவனுக்கு ஏற்றதல்ல தெள்ளுதமிழ் என்பவர்கள்
கோயிலுக்குக் காவல்செலக கல்லறையாக்க யாம்வருவோம்

நோய்கொண்ட இவர்மனது தாய்மொழியைத் தூற்றுதய்யோ
தேய்ந்திட்ட இவர்மதியும் பிறமொழியைப் போற்றுதய்யோ
காய்தன்னைக் கனியென்று கருத்தழிந்துப் புகழ்வதாலே
வாய்த்தநல் இனிமையினை என்தமிழும் இழந்திடுமோ

அறமும் மறமும்நல் அறிவுடைக் காதலும்
புறமும் அகமுமாய்ச் செறிவுசேர் கவிதையாய்
வழங்கி அதன்வழி திறம்பட வாழ்ந்தஇனம்
பழமைப் புகழிது கனவாய்ப் போனதின்று

எழிலார்ந்த தமிழேநின் விழியோரம் கசிவதேனோ
மொழியமுது வாய்த்தநின் இதழிசையும் நின்றதேனோ
வீழ்ந்திருக்கும் உன்னினத்தார் இழிநிலையைக் கண்டுநீயும்
தாழ்தலுற்றுக் கலங்கிநின்றால் எமைத்தேற்றுவார் யார்தாயே

வரம்வேண்டி வருகின்றோம் உன்னிடத்துத் தமிழ்த்தாயே
சிரந்தாழ்ந்து வருத்தத்தில் குரலிழந்து விழிபொழிய
நீயேநின்றால் யாமெல்லாம் செல்வதெங்கு நிமிர்ந்திடுக்
தாயேஉந்தன் குரல்தன்னை எம்விரல்கள் எழுதவிடு

பழுதான மடமைகளை அழிப்பதெம் கடமையினி
உழுவோம் யாம்தமிழ் நிலத்துவயிர உளக்கலப்பை
கொண்டுபுது எழுச்சியினைப் பயிராக்கி எம்முயிரை
எண்ணத்துப் பாத்திகளில் நீராக்கிப் பாய்ச்சிடுவோம்

வித்துக்கள் உன்னிடத்து எழுத்தாகப் பெற்றேயாம்
சித்தத்தின் சத்தத்தில் சந்தப்பயிர் இயற்றிடுவோம்
சத்திபெற்ற வித்தகராய் வியனுலகில் உலவிடுவோம்
சத்தியமும் சமத்துவமும் பத்தியுடன் போற்றிடுவோம்

மொழிப்பற்று இல்லாரை எள்ளியாம் தூற்றிடுவோம்
அழிவற்ற தமிழிசைத்து அழியாமை எய்திடுவோம்
வழக்காறு இழந்துபோன வடமொழியே மந்திரமாய்
வழங்கிவரும் இழவுகட்கு இடமின்றிச் செய்திடுவோம்

எம்கவிப் பொழிலதனில் நற்றமிழ்நீ தென்றலாக
தெம்மாங்குச் சத்தமிட்டு வீசிடுக என்னாளும்
கருத்துமலர் வாசமது மனிதமன வண்டுபல
அருகிழுத்து இன்பமது நனிதரவே செய்திடுக

இனியுந்தன் பேரழகை எம்விரல்கள் தாமெழுத
பனியுருக்கும் சூரியனாய்க் கவிவானில் தோன்றிநீயும்
மனபூமியிலே பவனிவரும் இருளறுப்பாய் விடியுமந்த
கனலதனில் கயமைகளும் காரிருளின் கதியடையும்

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

No comments: